முகப்பு
பெங்களூரு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

முதல்கட்டமாக 105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆக.31-ஆம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:25 AM
பகிர்:

முதல்கட்டமாக 105 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆக.31-ஆம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
கர்நாடகத்தில் உள்ள 208 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதல்கட்டமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டம் நீங்கலாக, சித்ரதுர்கா, தாவணகெரே, தும்கூரு, மைசூரு, சாமராஜ்நகர், தென் கன்னடம், உடுப்பி, ஹாசன், மண்டியா, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், கதக், ஹாவேரி, வடகன்னடம், கலபுர்கி, கொப்பள், பெல்லாரி, ராய்ச்சூரு, பீதர், யாதகிரி ஆகிய 21 மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள், 53 நகரப் பஞ்சாயத்துகள், 20 பேரூராட்சிகள் உள்ளிட்ட 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்தது.
3 மாநகராட்சிகளில் 135 வார்டுகள்,  29 நகராட்சிகளில் 925 வார்டுகளும், 53 நகரப் பஞ்சாயத்துகளில் 1,247 வார்டுகளும், 20 பேரூராட்சிகளில் 355 வார்டுகளும் ஆகமொத்தம் 2,662 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. 
சிவமொக்கா, மைசூரு, தும்கூரு மாவட்டங்களில் உள்ள 3 மாநகராட்சிகளில் உள்ள 135 வார்டுகளில் மொத்தம் 814 வேட்பாளர்களும், 21 மாவட்டங்களில் இருக்கும் 102 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2,529 வார்டுகளில் 8,340 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2,306 வேட்பாளர்களும், பாஜகவைச் சேர்ந்த 2,203 வேட்பாளர்களும், மஜத கட்சியைச் சேர்ந்த 1,397, சுயேச்சைகள் 2,134 வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர்.  3 மாநகராட்சிகளின் 135 வார்டுகளில் காங்கிரஸ் 135 வேட்பாளர்களையும், பாஜக 130 வேட்பாளர்களையும், மஜத 129 வேட்பாளர்களும், 350 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 102 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் காங்கிரஸ், 3 பேர் பாஜக, 17 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.  
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆக.31-ஆம் தேதி நடந்த தேர்தலில் மொத்தம் 67.51 சத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகராட்சிகள், நகராட்சிகள், நகரப் பஞ்சாயத்துகள், பேரூராட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் மாவட்ட தலைநகரங்கள், வட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் திங்கள்கிழமை (செப்.3) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 
இந்தத் தேர்தலில் மஜத, காங்கிரஸ், பாஜக போட்டியிடுகின்றன. அனைத்து வார்டுகளிலும் மும்முனைப் போட்டி நடந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருக்கும் மஜதவும் காங்கிரஸும் கூட்டணி அமைக்காமல், தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளன. இந்தத் தேர்தலில் மக்கள் அளிக்கவிருக்கும் தீர்ப்புக்கு உள்ளாட்சித் தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இத்தேர்தல் முடிவுகள் மூன்று கட்சி தொண்டர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.