குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
கல்வியாளர் குமார ராணி டாக்டர் மீனா முத்தையா (91) மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
கல்வியாளர் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா (91) மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கல்வியாளர், கொடையாளர், தஞ்சாவூர் ஓவியத்தின் பாதுகாவலர் எனப் போற்றப்பட்ட குமாரராணி டாக்டர் மீனா முத்தையா, வயது முதிர்வு தொடர்பான நோய்களுக்கு, ஊட்டியில் தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் காலமானார்.
அவரது மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
Advertisement
Advertisement
கலைச் சேவை, கல்விச் சேவை இரண்டையும் தமது வாழ்வின் இருபெரும் இலட்சியங்களாகக் கொண்டு வாழ்ந்த பெருமைக்குரியவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள்.
தஞ்சாவூர்க் கலைக்குப் புத்துயிர் கொடுத்து, அதற்காகவே குமார ராஜா முத்தையா கலை மற்றும் கைவினைக் கலைப் பள்ளியின் மூலம் பயிற்சியும் அளித்து வந்த அவரது பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும். தனிப்பட்ட முறையிலும் எங்களது குடும்பத்துடன் இனிய நட்புறவைப் பேணி வந்த அவர், எனது துணைவியாரின் நூல் வெளியீட்டு விழாவிலும் 2018-ஆம் கலந்துகொண்டு உரையாற்றியதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
மீனா முத்தையா மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநிலத்தின் கலாசாரம் மற்றும் கல்வித் துறைக்கு குமாரராணி மீனா முத்தையா ஆற்றிய மகத்தான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் தமிழ்நாடு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இவரது இறுதி ஊர்வலம், செட்டிநாடு இல்லத்திலிருந்து நாளை (மே 3) காலை 9 மணிக்குப் புறப்பட்டு, மயிலாப்பூர் மயானத்தில் இறுதிச்சடங்குகள், அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
Chief Minister MK Stalin Expresses Condolences on the Demise of Kumararani Meena Muthiah
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.