சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு கிறிஸ்தவ பேராயர் இரங்கல்
சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு பெங்களூரு கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள் மறைவுக்கு பெங்களூரு கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிவக்குமார சுவாமிகள், மிகச் சிறந்த ஆன்மிகத் தலைவராகவும், மனிதநேயவாதியாகவும், கல்வியாளருமாகவும் விளங்கினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மீது அளவிடமுடியாத அன்பை பொழிந்துவந்த சிறந்த புனிதர் ஒருவரை நாடு இழந்துள்ளது.
சமுதாயத்தில் ஜாதி, நிறம், பகுதி, மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட, அநீதிக்குள்ளாக்கப்பட்ட எண்ணற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளின் மீது புனிதரின் அன்பு நிலையாக இருந்ததை காலம் மறக்காது. சிவக்குமார சுவாமிகளின் மறைவால் சோகத்தில் மூழ்கியுள்ள அவரது பக்தர்களுக்கு பெங்களூரு கத்தோலிக்க கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த சோகத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றலை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.