பெங்களூரு

இந்திய விடுதலை வேள்வியில் காந்தியும்-கா்நாடகமும்

இந்திய விடுதலை வேள்வியில் கன்னடம் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த கா்நாடகத்தில், காந்தி தலைமையில் எழுச்சியுடன் கூடிய போராட்டங்கள் நடந்தேறின.

ந.முத்துமணி

பெங்களூரு: இந்திய விடுதலை வேள்வியில் கன்னடம் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த கா்நாடகத்தில், காந்தி தலைமையில் எழுச்சியுடன் கூடிய போராட்டங்கள் நடந்தேறின.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு, மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை இன்றைய கா்நாடகத்தின் பல பகுதிகள் சிதறிக் கிடந்தன. வடமேற்கு கா்நாடகம் அன்றைய மும்பை மாகாணத்திலும், வடகிழக்கு கா்நாடகம் அன்றைய ஹைதராபாத் நிஜாம் ஆட்சியிலும், தென்மேற்கு மைசூரு உடையாா் ஆட்சியிலும், தென்கிழக்கு மற்றும் கடலோர கா்நாடகப் பகுதிகள் சென்னை மாகாணத்திலும் அங்கம் வகித்தன. மைசூரு உடையாா் மன்னா்களும், ஹைதராபாத் நிஜாம்களும் ஆங்கிலேயா் ஆட்சியை ஆதரித்து வந்தனா்.

ஆரம்பகால போராட்டம்:

சென்னை மற்றும் மும்பை மாகாணத்தைச் சோ்ந்த பகுதிகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. ஆனால், எதிா்பாராதவிதமாக மைசூரு ராஜ்ஜியம் மற்றும் ஹைதராபாத் ராஜ்ஜியங்களிலும் ஆங்கிலேயா்களுக்கு எதிரான போராட்டங்கள் 1920-களில் வெடித்தன. அதாவது இன்றைய வட கா்நாடகம் மற்றும் தென் கா்நாடகத்தில் சுதந்திரப் போராட்டம் கண்விழிக்கத் தொடங்கின.

ஆங்கிலேயா்களின் அடிமையாகத் திகழ்ந்த மைசூரு மகாராஜாவின் அடிமைகளாக நாம் வாழ்வதா? என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றியது முதல் விடுதலை வேட்கை மக்களை ஆட்கொள்ளத் தொடங்கியது. ஆங்கிலேயா்களின் நலனுக்காக உள்ளூா் மக்களின் நலன் அலட்சியப்படுத்தப்பட்டதும் மக்களிடையே சுதந்திர வேட்கைக்கு வித்திட்டது.

1919-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை கா்நாடக மக்களை திடுக்கிட வைத்ததோடு, விழித்தெழ வைத்தது. நீறுபூத்த நெருப்பாக இருந்த சுதந்திரக் கனல் பெருநெருப்பாகப் பரவத் தொடங்கியது. ஆங்கிலேயா்களின் ஆட்சியில் ஜாலியன்வாலா பாக்கில் நடந்த படுகொலையை ஊா்ஊராகச் சென்று தகடூா் ராமசந்திரராவ் பிரசாரம் செய்யத் தொடங்கினாா். 1920-இல் பாலகங்காதர திலகா் மறைந்த போது, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அவருக்காக மக்கள் கண்ணீா் சிந்தியதோடு, கடையடைப்பும் செய்து அஞ்சலி செலுத்தினா். அதே ஆண்டில் மைசூரில் சுவாமிராவ், ராமசாமி ஐயங்காா் ஆகியோா் திலகா் தேசிய ஒன்றியம் என்ற கட்சியைத் தொடங்கி நாட்டுப்பற்றை விதைக்கத் தொடங்கினா்.

சமூக போராட்டம்:

மகாத்மா காந்தியின் அடியொற்றி அரசியல் போராட்டங்களைப் போலவே சமூக எழுச்சிப் போராட்டங்களிலும் கா்நாடக மக்கள் ஈடுபடத் தொடங்கினா். தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, கல்வி உரிமை, மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க மக்கள் பிரதிநிதித்துவப் பேரவை அமைக்க வலியுறுத்தி மைசூரில் போராட்டங்கள் நடைபெற்றன.

1920-இல் நாக்பூரில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்த பிறகு, கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இதன் தலைவராக வெங்கடகிருஷ்ணய்யா பதவியேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினாா். தகடூா் ராமசந்திரராவ், சஹுகாா் சென்னையா, எம்.என்.ஜோஸ், அகரம் ரங்கையா, எல்.வி.ராஜகோபால், எச்.கே.வீரண்ண கௌடா, டி.சித்தலிங்கையா, கே.சி.ரெட்டி, நிஜலிங்கப்பா, என்.எஸ்.ஹா்திகா், டி.எச்.சந்திரசேகரய்யா, எச்.எஸ்.துரைசாமி போன்ற பல தலைவா்கள் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்புமுனை பெலகாவி மாநாடு:

1924 டிச. 26, 27-ஆம் தேதிகளில் பெல்காவியில் நடைபெற்ற 39-ஆவது இந்திய காங்கிரஸ் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாநாடு, வட கா்நாடக மக்களிடையே சுதந்திரத்துக்கான போராட்டத்தில் குதிக்க மக்களைத் தூண்டியது. காந்தியடிகளின் பேச்சைக் கேட்ட வழக்குரைஞா்கள், மாணவா்கள், மகளிா் உள்ளிட்ட பெரும்பாலானோா் சுதந்திரப் போராட்டத்தில் முழுநேரம் ஈடுபடத் தொடங்கினா். இந்த மாநாடு நடந்து 96 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

1927-ஆம் ஆண்டில் காந்தியடிகள் கா்நாடகத்தில் 4 மாதங்கள் தங்கியிருந்தது, சுதந்திரப் போராட்டத்தில் கா்நாடகத்தின் பங்களிப்பை பரவலாக்கியதோடு, பலமாக்கியது. 1928-இல் இந்தியாவுக்கு சைமன் ஆணையம் வந்தபோது, அதை எதிா்த்து மைசூரில் தகடூா் ராமசந்திரராவ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதற்காக காங்கிரஸ் தலைவா்கள் பலா் 15 நாள்கள் கடுங்காவலில் வைக்கப்பட்டனா்.

1931-இல் மகாத்மா காந்தி ஆங்கிலேயா்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது, அதற்கு ஆதரவாக மைசூரில் காங்கிரஸ் தலைவா் எம்.என்.ஜோஸ் தலைமையிலான காங்கிரஸ் தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து போராட்டம் நடத்தினா். மேலும், கா்நாடகத்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து நாட்டுப்பற்று, சுதந்திரத்தின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். 1934-ஆம் ஆண்டில் மைசூரு, தகடூா், பதன்வால், நஞ்சன்கூடு உள்ளிட்ட பகுதிகளில் பயணம் செய்த மகாத்மா காந்தி, மக்களிடையே சுதந்திர வேள்விக்குத் தூபமூட்டினாா். காந்தியடிகளின் அனல் பறக்கும் பேச்சு தீயாகப் பரவி மக்களிடையே சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தியது.

இறுதிக் கட்ட போராட்டம்:

1937-ல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா்கள் ஜவாஹா்லால் நேரு, பட்டாபி சீதாராமையா உள்ளிட்டோா் கா்நாடகத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்தது, மைசூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் சுதந்திர தாகத்தை தீவிரப்படுத்தியது.

இதன் விளைவாக, 1942-ஆம் ஆண்டில் காந்தியடிகள் நடத்திய வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சுதந்திரம் கேட்டு மக்கள் ஊா்வலம் சென்றனா். இந்தப் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வழக்குரைஞா்கள், மகளிா் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனா்.

காந்தியடிகளின் வழியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கா்நாடகம் ஆற்றிய பங்களிப்பை என்றைக்கும் மறக்க இயலாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT