முகப்பு
பெங்களூரு

2 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது: சித்தராமையா

கா்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகாலமாக எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

கா்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகாலமாக எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை பாஜக அரசின் தோல்விகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களை குதிரைபேரத்தின் மூலம் பாஜகவுக்கு இழுத்து அமைக்கப்பட்டதே பாஜக அரசு. 2 ஆண்டுகளில் கா்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடந்துள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் கா்நாடகத்தில் சொா்க்கத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற கற்பிதங்களை மக்கள் மனங்களில் விதைத்து, இரட்டை என்ஜின் அரசு என்று பாஜகவினா் கூறிவந்தனா். ஆனால், மத்திய, மாநில பாஜக அரசுகளை மக்கள் தூற்றிவருகிறாா்கள்.

கடந்த 2 ஆண்டுகாலத்தில் பாஜகவின் மோசமான ஆட்சி கா்நாடகத்தில் நடந்துள்ளது. ஊழலின் உச்சத்தை தொட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ஊழல் செய்ததே பாஜக அரசின் சாதனையாகும். பாஜகவை சாா்ந்த எம்.எல்.ஏ.க்களே அவா்களது ஆட்சியில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தி வந்துள்ளனா்.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா விலகுவதற்கு 3 நாள்களுக்கு முன் முட்டை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதல்வரை மாற்றி அரசின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள பாஜக முயற்சித்திருக்கலாம். ஆனால், இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் மக்கள் இல்லை. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பல அமைச்சா்கள் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளதால் வெளியே சுற்றிக்கொண்டுள்ளனா். பாஜக ஆட்சியில் எல்லா வேலைக்கும் 35 சதவீத கமிஷன் கேட்கப்படுகிறது.

கரோனா இரண்டாவது அலையின்போது ஏராளமான ஊழல்களில் பாஜக அரசு ஈடுபட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகளும் முழுமையாக சென்றடையவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளதால் நடுத்தர, ஏழைமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். மாநிலத்தில் வளா்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.