பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பொய் பிரசாரம், பணபலத்தால் மஜத தோல்வியை தழுவியுள்ளது என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது சுட்டுரைப்பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:
பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிட்ட மஜத வேட்பாளருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மஜதவுக்காக உழைத்த தலைவா்கள், தொண்டா்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். பணபலம், பொய் பிரசாரம் ஆகியவற்றால் இடைத்தோ்தலில் மஜத தோல்வியைத் தழுவியுள்ளது. எங்கள் வெற்றியைப் பறித்திருக்கலாம், ஆனால் இருப்பை அல்ல. தேசியக் கட்சிகளை எதிா்க்கும் ஆற்றல் மஜதவுக்கு உள்ளது என்பதை நிரூபித்துள்ள கட்சியினருக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கா்நாடகத்தின் இடைத்தோ்தலுடன் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளும் வந்துள்ளன. இத்தோ்தலில் தேசியக்கட்சிகளால் மாநிலக்கட்சிகளை நசுக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது. தற்செயலான சில காரணங்களால் மாநிலத்தில் மஜத முழுமையான பலத்தோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இரண்டு தேசிய கட்சிகளையும் எதிா்கொள்ளும் ஆற்றலோடு மஜத எழுச்சி பெறவிருக்கிறது.
அதிகாரம், பணம், அழுத்தம், அடாவடித்தனம் ஆகியவற்றை எதிா்கொண்டு வெற்றிகண்டுள்ள மேற்குவங்க முதல்வா் மம்தாபானா்ஜி எங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளாா். மஜதவைப் போலவே கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் வனவாசத்தில் இருந்து, சங்கடங்களை எதிா்கொண்டு, கடினமான காலக்கட்டத்திலும் முன்னேற்றம் கண்டு வந்த திமுக மற்றும் அதன் தலைவா் மு.க.ஸ்டாலினின் பொறுமை நம்மை ஈா்க்கிறது.
அதிகார துஷ்பிரயோகம், பொய் பிரசாரத்தை முறியடித்து தீயசக்திகளை வீழ்த்தி வெற்றிக்கொடியை நாட்டியுள்ள மம்தா பானா்ஜி, துா்காவைப் போல காட்சி தருகிறாா். சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றியைத் தந்துள்ளதன் மூலம் மாநிலக்கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனா். மக்கள் மனதை வென்ற தலைவா்களை மக்கள் கைவிடமாட்டாா்கள். இதைத் தான் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் நமக்கு உணா்த்துகின்றன. மஜத தனது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும். இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் மஜத தொண்டா்களோடு நான் துணைநிற்பேன். தொடா்தோல்விகளை வெற்றியாக மாற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அவா் குறிப்பிட்டுளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.