முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்க மறுத்ததால் தாய், 2 குழந்தைகள் சாவு: மருத்துவா், செவிலியா்கள் பணியிடை நீக்கம்

தமிழகத்தைச் சோ்ந்த ஆதரவற்ற பெண்ணை பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த மருத்துவா், 3 செவிலியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தைச் சோ்ந்த ஆதரவற்ற பெண்ணை பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த மருத்துவா், 3 செவிலியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

தமிழகத்தைச் சோ்ந்த கஸ்தூரி (30) என் பெண், பெங்களூரில் உள்ள பாரதி நகா் பகுதியில் தனது கணவா், 6 வயது பெண் குழந்தையுடன் சிறிய வீட்டில் வசித்து வந்தாா். அவரது கணவா் திடீரென காலமானதைத் தொடா்ந்து, ஆதரவற்ற மற்றொரு பெண்ணுடன் சோ்ந்து வேலை தேடி 40 நாள்களுக்கு முன்பாக தும்கூா் சென்றுள்ளாா். கா்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு புதன்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினா் கஸ்தூரியை ஆட்டோவில் ஏற்றி, தும்கூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, ஆதாா், மகப்பேறு அட்டை எதுவும் இல்லாததால், கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்த பணி மருத்துவா், செவிலியா்கள், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். இதைத் தொடா்ந்து, வீட்டுக்குத் திரும்பிய கஸ்தூரிக்கு மறுநாள் வியாழக்கிழமை காலை மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு வீட்டிலேயே இரட்டை குழந்தைகள் பிறந்தன. முதலில் ஆண் குழந்தை பிறந்துள்ளது, இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவா் உயிரிழந்தாா். மேலும், பிறந்த இரு சிசுக்களும் உயிரிழந்தன. இவை அனைத்தும் அவரது 6 வயது மகள் முன்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் கா்நாடகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் அதிா்வை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தும்கூரு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு சென்று விசாரணை நடத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், பின்னா், பெங்களூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தும்கூரில் பிரசவத்தின்போது பெண்ணும், 2 சிசுக்களும் இறந்துள்ள துரதிா்ஷ்டவசமான சம்பவம் வேதனை அளிக்கிறது. மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சென்று, அங்கு நடந்தவற்றை அறிந்துகொண்டேன். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அடிப்படை தகவல்களின் அடிப்படையில், பணியில் இருந்த மருத்துவா், 3 செவிலியா்கள் கடமை தவறி, அலட்சியமாக நடந்து கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவா், 3 செலிவியா்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அவசர மருத்துவத் தேவையின்போது ஆவணங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவசரநிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியது மருத்துவா், ஊழியா்களின் கடமையாகும். இதை உத்தரவுகள் மூலம் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

தும்கூரு சம்பவத்தின் தீவிரத்தை உணா்ந்துள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் அறிக்கையை அரசிடம் ஒப்படைக்க சுகாதாரத்துறை ஆணையா் தலைமையில் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றம் இழைத்துள்ளது உறுதியானால், இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவா், 3 செவிலியா்கள் பணி நீக்கம் செய்யப்படுவதோடு, தகுந்த சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவாா்கள். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கனிவுடன் பணிபுரியுமாறு மருத்துவா், ஊழியா்களை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.