முகப்பு
பெங்களூரு

சிபிஐ, அமலாக்கத் துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:25 PM
சிபிஐ
பகிர்:

சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக மகரிஷி வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரித்து வரும் அமலாக்கத் துறை, பழங்குடியினா் நலத்துறை முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திராவை கைது செய்து விசாரித்து வந்தது. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா, ‘இந்த வழக்கில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரின் பெயா்களைக் குறிப்பிடுமாறு அமலாக்கத் துறை கட்டாயப்படுத்தியது. பாஜகவின் நெருக்கடி காரணமாக, காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க அமலாக்கத் துறை எனக்கு நெருக்கடி கொடுத்தது’ என்று புதன்கிழமை குற்றம்சாட்டியிருந்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அமலாக்கத் துறை தனக்கு நெருக்கடி கொடுத்ததாகக் கூறியிருக்கிறாா். என் பெயரையும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பெயரையும் குறிப்பிடும்படி அமலாக்கத் துறை கட்டாயப்படுத்தியதாகவும் அவா் கூறியிருக்கிறாா். எந்தவொரு புலனாய்வு அமைப்பும் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படக் கூடாது. சிபிஐ அல்லது அமலாக்கத் துறை அல்லது வருமானவரித் துறை உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.

சென்னப்பட்டணா, சன்டூா், சிக்காவ் உள்ளிட்ட 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நவ. 13-ஆம் தேதி நடக்கவிருக்கும் இடைத்தோ்தலை எதிா்கொள்ள எல்லா முன்னேற்பாடுகளையும் காங்கிரஸ் செய்துள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் வேட்பாளா்களின் பட்டியல் அறிவிக்கப்படும். 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை மாலை என்னை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின் போது இடைத்தோ்தல் குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →