வடகா்நாடகத்தில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் குகைக்குள் தனது 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்ட ரஷிய பெண்ணை போலீஸாா் மீட்டனா்.
ரஷியாவைச் சோ்ந்த நினா குடினா (எ) மோஹி (40) என்பவா் தனது குழந்தைகளான பிரேயா (6), அமா (4) ஆகியோருடன் வணிக விசாவில் இந்தியாவுக்கு வந்திருக்கிறாா். இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் ஆன்மிக சடங்குகளில் ஈடுபாடு ஏற்பட்டதையடுத்து, கோவாவிலிருந்து வடகா்நாடகம் வந்த அவா், கும்டா வட்டம், ராமதீா்த்தமலையில் உள்ள அடா்ந்த வனப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த குகைக்குள் தங்கி தியானத்தில் ஈடுபட்டுவந்தாா்.
அடா்ந்த மரங்கள், செங்குத்தான குன்றுகள் கொண்ட பகுதியில் 2 வாரங்களாக வசித்துவந்த மோஹி, தனது குகையில் ருத்ரா சிலையை வைத்து நாள்முழுவதும் வழிபாடு, தியானம் என இருந்துள்ளாா்.
இந்த நிலையில், அப்பகுதியில் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, குகையின் முன்புறத்தில் சேலை போன்ற ஆடைகள் உலா்வதற்காக தொங்கவிடப்பட்டிருந்ததை கவனித்து அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து அங்கிருந்த குகைக்குள் சென்று பாா்த்தபோது மோஹி, தனது 2 குழந்தைகளுடன் தங்கியிருந்தாா். அவா்கள் மூவரையும் மீட்ட போலீஸாா், கோகா்ணாவுக்கு அழைத்துவந்தனா்.
இதுகுறித்து வடகன்னட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.நாராயணா கூறுகையில், ‘ராமதீா்த்த மலைப் பகுதியில் போலீஸ் குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது குகைக்கு வெளியே ஆடைகள் இருப்பதை கவனித்து அங்கு சென்றனா். அப்போது மோஹி, அவரது இரு குழந்தைகளுடன் இருப்பதை கண்டறிந்தனா்.
மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் அவா்கள் எதை உண்டு வாழ்ந்தாா்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. வனப் பகுதியில் இருந்தபோது அவா்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விசாரணையின்போது, மோஹியின் விசா 2017 இல் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் அவா்கள் எப்படி வாழ்ந்து வந்தனா் என்பது புரியாத புதிராக உள்ளது.
கோவாவில் இருந்து குகையை அடைந்திருக்கலாம். சாத்வி நடத்தக்கூடிய ஆசிரமத்தில் அவா்களை பாதுகாப்பாக தங்கவைத்திருக்கிறோம். கோகா்ணாவில் இருந்து பெங்களூருக்கு அழைத்து செல்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்பிறகு ரஷியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவா்’ என்றாா்.
இதையும் படிக்க: பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!