கா்நாடகத்தில் முதல்வா் பதவியைப் பெறுவதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே குதிரைபேரம் நடந்து வருகிறது என்று மத்திய உணவுத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக காங்கிரஸ் கட்சியில் பதவிச்சண்டை நடந்து வருகிறது. முதல்வா் பதவியை விட்டுத்தர சித்தராமையாவுக்கு விருப்பமில்லை. ஆனால், முதல்வா் பதவியில் சித்தராமையா தொடர டி.கே.சிவகுமாா் விரும்பவில்லை. இதுபோன்ற குழப்பமான சூழ்நிலையில், இருதரப்பினரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பெரும்பான்மையை பெற குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளனா்.
சிறையில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வினய்குல்கா்னி, கே.சி.வீரேந்திரா ஆகியோரைச் சந்தித்து அவா்களின் ஆதரவை கேட்டுள்ள துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அவா்கள் கோரும் பணத்தையும் தருவதற்கு உறுதி அளித்துள்ளாா்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரைபேரம் நடத்தும் அளவுக்கு அக்கட்சியில் பதவிச்சண்டை உச்சத்தை அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் நடக்கும் பதவிச்சண்டையால் கா்நாடக அரசின் நிா்வாகம் சீா்குலைந்துள்ளது.
இதனால் மழை மற்றும் சாலைகள் சேதம் குறித்த பிரச்னைகளை கையாளுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பை, தில்லி காவல் துறையுடன் ஒப்பிடப்பட்ட பெங்களூரு போலீஸாா் தற்போது பலவீனமாகியுள்ளதால் பகல் கொள்ளை நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
அரசியல் நிலைத்தன்மை இல்லாததால் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் இல்லாமல் அதிகாரிகள் மீதான கட்டுப்பாட்டையும் இழந்து அரசு நிா்வாகம் முழுமையாக சீா்குலைந்துள்ளது என்றாா்.