முகப்பு
சென்னை

திருத்தணி ஒன்றியத்தில் பாதசாரிகளை மிரள வைக்கும் மின்கம்பங்கள்!

திருத்தணி, ஆக. 28: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள பல மின்கம்பங்கள் சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து, எந்த நேரத்திலும் ஒடிந்துவிடும் ஆபத்தான நிலையில் உள்ளன. ÷திருத்தணி ஒன்றியத்துக்கு உள்பட

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:17 PM
பகிர்:

திருத்தணி, ஆக. 28: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள பல மின்கம்பங்கள் சிமென்ட் காரை உதிர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து, எந்த நேரத்திலும் ஒடிந்துவிடும் ஆபத்தான நிலையில் உள்ளன.

÷திருத்தணி ஒன்றியத்துக்கு உள்பட்டது காசிநாதபுரம் கிராமம். இக் கிராமத்தில் உள்ள நடுத்தெரு என்ற சாலையை |4 லட்சம் செலவில் சிமெண்ட் சாலையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. எனவே அந்த சாலையின் நடுவில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றி  ஓரத்தில் நடவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர், மின்சார வாரித்திடம் மனு கொடுத்தார். ஆனால் மின்சார துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமலேயே சிமென்ட் சாலை போடப்பட்டது. இதனால் இந்த தெருவுக்குள் எந்த வாகனமும் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

÷இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறும்போது: எங்கள் கிராமத்தில் நடுத்தெருவில் இருக்கும் மின் கம்பத்தை அகற்றி ஓரத்தில் நடவேண்டும் என முதலில் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டோம். பிறகு திருத்தணி மின்வாரியத்திடம் மனுகொடுத்தோம். ஆனால் இதுவரை யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, டிராக்டர், லோடு ஆட்டோ போன்ற வாகனங்கள் கூட நடுத்தெருவுக்குள் வர முடியவில்லை என்று அவர் கூறினார்.

÷இதேபோல் திருத்தணி ஒன்றியத்தில் உள்ள செருக்கனூர் ஊராட்சியில் உள்ள  மாம்பாக்கம் கிராம பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் தூண்கள் உடைந்தும், சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளன.

÷தற்போது மழைக்காலம் என்பதால், காற்று பலமாக அடிக்கும் போது டிரான்ஸ்ஃபார்மர் பொருத்தப்பட்டுள்ள தூண்கள் முறிந்துவிடும் நிலையில் உள்ளன. மின்கம்பங்களை மாற்றக்கோரி மின் வாரியத்திடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.

÷சிமென்ட் காரை பெயர்ந்த மின்கம்பங்கள் மின் வாரியத்தினருக்கு வேண்டுமானால்  சாதாரணமாக இருக்கலாம். ஆனால், தினமும் அதை பார்த்து அச்சப்படும் மக்களின் பயத்தை போக்கவாவது மின் வாரியம் மோசமான மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும், தெருவின் நடுவில் இருக்கும் மின் கம்பத்தை அகற்றி சாலையின் ஓரத்தில் நடவும் முன்வரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். திருத்தணி மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.