முகப்பு
சென்னை

கனமழையால் சிதைந்த அகூர் - நத்தம் சாலை

திருத்தணி, நவ. 7: கனமழையால் அகூர்- நத்தம் செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணி ஊராட்சிக்கு உட்பட்டது அகூர்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:02 PM
பகிர்:

திருத்தணி, நவ. 7: கனமழையால் அகூர்- நத்தம் செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருத்தணி ஊராட்சிக்கு உட்பட்டது அகூர்- நத்தம் செல்லும் சாலை. கோரமங்களம் அருந்ததி காலனி, தன்னுமோடு, ராஜூலுகண்டிகை, சத்திரம், மாம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம், ராமகிருஷ்ணாபுரம் மோட்டூர் ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் தினமும் இச்சாலையை கடந்துதான் திருத்தணி நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலையில் இருந்த சிறு பள்ளங்கள் பெரும் பள்ளங்களாக மாறி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டு சாலைப் பணிகள் நடைபெற்றது. சாலை சரியான முறையில் சீரமைக்காமல் விடப்பட்டதால் தற்போது பெய்த மழையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு அவற்றில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

நத்தம் கிராமத்தில் செல்லும் சாலையில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்கள், மினி வேன்கள் சகதியில் சிக்கிக் கவிழும் நிலை உள்ளது.

திருத்தணி- சோளிங்கர் செல்ல இது குறுக்குச் சாலை என்பதால் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழியே செல்கின்றன. பைபாஸ் சாலைக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இதன் வழியாக வந்து செல்வதால் சாலை மேலும் பழுதடைந்துள்ளது.

அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலையை உடனே சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களில் இச்சாலையில் உள்ள மரணப்பள்ளங்களில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.