முகப்பு
சென்னை

புதுச்சேரி தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்களைக் கேட்டுப்பெறுமா அரசு?

புதுச்சேரி, மே 29: புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களைக் கேட்டுப்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.  ÷புதுச்சேரியில

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:02 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:03 PM

புதுச்சேரி, மே 29: புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களைக் கேட்டுப்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 ÷புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான "சென்டாக்' எனப்படும் பொது சேர்க்கைக் கமிட்டி மூலம் அரசு, தனியார் மருத்துவம், பொறியியல், செவிலியர், கால்நடை, வேளாண் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. தொடக்கத்தில், அனைத்து கல்லூரிகளிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்ற புதுச்சேரி அரசு, 2005-ல் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, அதை 30 விழுக்காடாகக் குறைத்துக்கொண்டது.

 இதில் 30 விழுக்காடு இடத்திலும், பிராந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் எழும் பிரச்னைகளையும் அரசு தீர்க்க முன்வரவில்லை. பிராந்திய ஒதுக்கீட்டின்படி, அந்தந்த பிராந்திய கல்வித் தரத்தின் அடிப்படையில், கேரள பாடத்திட்டத்தில் பயிலும் மாஹே மாணவர்களுக்கு 4 விழுக்காடும், ஆந்திர பாடத்திட்டத்தில் பயிலும் யேனம் மாணவர்களுக்கு 3 விழுக்காடு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

Advertisement

 தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படி பயிலும் புதுச்சேரி, காரைக்கால் மாணவர்களுக்கு ஒரே இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வந்த நிலையை மாற்றி, மொத்த இடங்களில் 18 விழுக்காட்டை காரைக்கால் பிராந்தியத்துக்கு ஒதுக்கீடு செய்தனர்.

 இதனால், 2011-ம் ஆண்டு, மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 190.333 மதிப்பெண் பெற்ற புதுச்சேரி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்தது. ஆனால், காரைக்காலில் 168.666 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்தது. இந்த பிராந்திய இடஒதுக்கீட்டு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், நீதிமன்றம் சென்றனர். ஆனாலும், இப்பிரச்னைக்குத் தற்போதுவரை தீர்வு காணப்படவில்லை.

 மேலும், நிர்வாக ஒதுக்கீட்டில் இடங்களை ஒதுக்க, அனைத்துக் கல்லூரிகள் சார்பில், நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

 இந்த தேர்வு எப்படி நடைபெறுகிறது, தேர்வுத்தாள் தயாரிப்பது யார், எத்தனை இடங்கள், எவ்வளவு ரூபாய்க்கு நிர்வாக இட ஒதுக்கீட்டில் வழங்கப்படுகின்றன என்பன போன்ற விவரங்களைக் கண்காணிக்க வேண்டிய அரசு, இதில் மெüனம் காப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

 இதுபோன்ற பல பிரச்னைகள் நடைமுறையில் இருக்க, இந்த ஆண்டுக்கான சென்டாக் விண்ணப்பம் விநியோகத்தை மே 30-ம் தேதி முதல் அரசு தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டாவது கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்ற கேள்விக்கு விடைதெரியாமலேயே மாணவர்கள் இந்த கவுன்சலிங்கைச் சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர்.

 இங்கு இடம் கிடைக்காதவர்கள், பணம் செலவழித்துப் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் நிலை இருக்கிறது. மேலும், மத்திய அரசு அறிவித்த மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்குப் படிப்பதா வேண்டாமா என்ற குழப்பமும் மாணவர்களிடம் எழுந்துள்ளது.

 இதுதொடர்பாக முன்னாள் கல்வியமைச்சரும், எம்எல்ஏவுமான க.லட்சுமிநாராயணன் கூறியது: ஒவ்வொரு மருத்துவ, பொறியியல் இடங்கள் அதிகமாக விலைபோகின்றன. இவற்றின், லாபநோக்கு, வியாபாரமயம், வெளிப்படைத் தன்மையின்மை ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தனியார் கல்லூரிகள் தங்களது இடங்களை நிரப்புவது குறித்து அரசு கண்காணிப்பதில்லை.

 மேலும், தனியார் கல்லூரிகளிடம் இடங்களைப் பெற அரசு பேச்சுநடத்திக் கொண்டிப்பதாலேயே 30 விழுக்காடு இடங்கள் கிடைக்கின்றன. 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற கட்டாய இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றுவதிலும் அக்கறைகாட்டவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அரசாணை மட்டுமே வெளியிடுகிறது.

 அதேபோல, இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்வு வழங்கியிருக்கிறது. அதன்படி, மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதுச்சேரிக்கான 190.333 மதிப்பெண்ணுக்கும், காரைக்காலுக்கான 168.666 மதிப்பெண்ணுக்கும் இடைப்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ள புதுச்சேரி மாணவர்களுக்காக, கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தால் அனைத்து மாணவர்களும் பயன்பெற முடியும். இதில் சிக்கல் எழ வாய்ப்பில்லை.

 தாமதமாகும் சென்டாக் கவுன்சலிங்கால், மாணவர்களுக்கான இடங்களை, சேர்க்கை முடிந்ததாகக்கூறி, தனியாருக்கு விற்றுவிடுகின்றன சில கல்லூரிகள். சென்டாக் மூலம் 1000 மாணவர்கள் சேரக்கூடிய இடத்தில் தற்போது 425 பேருக்கு மட்டுமே இடங்கள் கிடைக்கின்றன. அதிலும், அரசின் தாமதத்தால், மேலும் சில இடங்களையும் இழக்க நேரிடுகிறது. இப்பிரச்னைகளைத் தீர்க்கக்கூறி, கடந்த 4 ஆண்டுகளாக அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்.

 அறிவிப்பிலேயே தாமதம்

 சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சென்டாக் கவுன்சலிங்குக்கு விண்ணப்பிப்போருக்கான விண்ணப்பங்கள் பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே வழங்கப்பட்டு வந்தன. மதிப்பெண்கள் வெளியானதும், கட்-ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, மாணவர்கள் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது.

 ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சென்டாக் அறிவிப்பு வெளியாவதிலேயே தாமதம் நிலவுகிறது என்கின்றனர் கல்வியாளர்கள். தற்போது மே 30-ம் தேதி முதலே சென்டாக் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இவற்றை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

 அதேபோல, சென்டாக் நிர்ணயிக்கும் கட்டணத்தைவிடக் கூடுதலாக தனியார் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், 3 அமர்வுக்குப் பிறகு, இறுதி நேரத்தில் மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லும்போது, சேர்க்கை முடிந்துவிட்டதாகக்கூறி, திருப்பி அனுப்பும் போக்கு இருப்பதாகவும் கடந்த ஆண்டு அனுமதியைத் தவறவிட்ட மாணவர்களிடம் இருந்து புகார்கள் எழுந்தன.

 எனவே, இந்த ஆண்டு சென்டாக் கவுன்சலிங் நடைபெறும் இடத்திலேயே, தேர்வாகும் கல்லூரிக்கான கட்டணத்தைச் செலுத்தச் செய்வதும், மாணவர்களது சேர்க்கையை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.