முகப்பு
சென்னை

பூண்டு விலை கடும் உயர்வு 

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சில்லறை விலையில் ஒரு கிலோ பூண்டு ரூ.220 முதல் ரூ.250 வரை விற்பனையானது.

Updated On : 30 நவம்பர், 2015 at 1:36 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:10 PM

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சில்லறை விலையில் ஒரு கிலோ பூண்டு ரூ.220 முதல் ரூ.250 வரை விற்பனையானது. விளைச்சல் குறைவால், ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.100 வரை விலை அதிகரித்துள்ளது.
 மக்களின் அன்றாட உணவில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசம், குழம்பு, பிரியாணி உள்பட சைவ-அசைவ உணவுகள் தயாரிப்பதற்கு இன்றியமையாததாக இருக்கிறது. இதுதவிர, சிறந்த மருந்துப் பொருளாகவும் விளங்குகிறது.
 சென்னையில் கடந்த வாரம் சில்லறை விலையில் ரூ.80 முதல் ரூ.90 வரை சிறிய ரகப் பூண்டு விற்கப்பட்டது.
 இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனையானது. இதேபோல் ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கப்பட்ட பெரிய ரகப் பூண்டு தற்போது ரூ.220 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. ஒரே வாரத்தில் பூண்டு விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.
 மொத்த விலையில் கடந்த வாரம் ரூ.2,700 முதல் ரூ.3,000 ஆயிரம் வரை விற்கப்பட்ட 30 கிலோ கொண்ட சிறிய ரகப் பூண்டு தற்போது ரூ.4,800-ஆக விலை உயர்ந்துள்ளது. இதேபோல் ரூ.3,700-க்கு விற்கப்பட்ட 30 கிலோ கொண்ட பெரிய ரகப் பூண்டு தற்போது ரூ.6,000-மாக விலை அதிகரித்துள்ளது.
 இருப்பினும், கோயம்பேடு சந்தை உள்ளிட்ட சில இடங்களில் சிறிய ரகப் பூண்டு (பழையது) ஓரளவுக்கு இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்டது.

விளைச்சல் குறைவு: விலை உயர்வு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மத்திய சென்னை மாவட்டச் செயலர் எம்.மாரித்தங்கம், பாரிமுனையைச் சேர்ந்த பூண்டு மொத்த வியாபாரி சந்திரமோகன் ஆகியோர் கூறியது:
 மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு அதிக அளவு பூண்டு தினமும் கொண்டுவரப்படுகிறது. சீசன் முடிவடைய உள்ளதால், அங்கு விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், காரம் குறைந்த சீன பூண்டு பல்வேறு காரணங்களால் வரத்து இல்லை.
 இதனால் பாரிமுனைக்கு கடந்த வாரம் வரை 3 லாரிகள் மூலமாக 50 டன் வரை விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பூண்டு, தற்போது 15 டன்னாக குறைந்துள்ளது. அடுத்த சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் தொடங்கும்போது அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.
அரசின் நடவடிக்கையால் குறைந்த பருப்பின் விலை!
 தமிழகத்தில் கடந்த மாதம் பருப்பு கிலோ ரூ.220 வரை விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய, மாநில எடுத்த பல்வேறு முயற்சிகள் காரணமாக அதன் விலை தற்போது சற்று குறைந்துள்ளது.
 சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சில்லறை விலையில் ஒரு கிலோ முதல்தர துவரம் பருப்பு ரூ.170-க்கும், கடலைப் பருப்பு ரூ.80-க்கும், உளுந்தம் பருப்பு ரூ.180-க்கும், பாசிப்பருப்பு ரூ.130-க்கும் விற்கப்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.