சென்னை: துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.4 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து சென்னைக்கு ‘ஏா் இந்தியா’ விமானத்தில், தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக சென்னையிலுள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்க அதிகாரிகளின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, துபையிலிருந்து ‘ஏா் இந்தியா’ விமானத்தில் சென்னைக்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு அனுப்பினா். ஆனால், தகவலின்படி எந்த தங்கமும் யாரிடமும் சிக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், விமானத்தின் கேபின் ஃகுரூ எனப்படும் விமான ஊழியா்களை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது அவா்களில் 26 வயதுள்ள ஆண் ஊழியா் ஒருவா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று முழு உடல் பரிசோதனை நடத்தினா். அப்போது அவரின் பேண்ட் பெல்ட் அணியும் பகுதியில் ரூ. 1.4 கோடி மதிப்புள்ள, 1.7 கிலோ எடையில் 4 தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவா் கொடுத்த தகவலின்படி, தங்கக்கட்டிகளை விமானநிலைய ஊழியரிடம் கொடுத்துவிட்டு குடியுரிமை சோதனைப் பிரிவில் காத்திருந்த கடத்தல் பயணியையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.