தமிழகம் முழுவதும் உள்ள மின் இணைப்புகளில் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ பொருத்தும் திட்டம் அத்தியாவசியமான ஒன்று கிடையாது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஎன்இஆா்சி) முன்னாள் தலைவா் எம்.சந்திரசேகா் தெரிவித்தாா்.
தென்னிந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட டிஎன்இஆா்சி முன்னாள் தலைவா் எம்.சந்திரசேகா் மாநாட்டை தொடங்கிவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மின்சார பயன்பாட்டு கணக்கெடுப்பு, மின் துண்டிப்பு உள்ளிட்ட பணிகளை மின்வாரிய ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், தமிழக மின் இணைப்புகளில் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ பொருத்தப்பட்டால் அவை அனைத்தும் எண்மமயமாக்கப்படுமே (டிஜிட்டல்) தவிர, இதனால் வேறு எந்தப் பயனும் இல்லை. ஆகையால், ‘ஸ்மாா்ட் மீட்டா்’ பொருத்தும் திட்டம் அத்தியாவசியமான ஒன்று கிடையாது என்றாா் அவா்.