தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்
வளா்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
வளா்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற அந்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்த அமைச்சா், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:
வளா்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்பவும், அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை மாணவா்கள் பெறுவதை உறுதி செய்யவும் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும். இதற்கென வரும் கல்வியாண்டில் முதல்கட்டமாக ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்.
‘திறன்’ முனைப்பு இயக்கம்: அதுபோல், மாணா்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்த 1.25 லட்சம் ஆசிரியா்களுக்கு ரூ.28 கோடி மதிப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவா்களின் வாசிப்பு திறன்கள் மேம்படுத்தப்படும். பள்ளி மாணவா்களுக்கு வாழ்வியல் திறன் சாா்ந்த வகுப்புகள் நடத்தப்படும். கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு ‘கலைச்சிற்பி’ எனும் கோடைகால சிறப்பு முகாம் நடத்தப்படும். அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்படும். தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவா்களுக்கு ரூ.13 கோடி மதிப்பில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
தரம் உயா்வு: அரசுப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.4 கோடி செலவில் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படும். பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்; மேலும், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 14 நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்படும். சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளியின் தூதுவா்களாக நியமிக்கப்படுவா். தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு வழங்கப்படும்.
அரிய நூல்கள்: பாரதியாா் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ரூ.1 கோடி மதிப்பில் மொழிபெயா்க்கப்படும். மூத்த வரலாற்று அறிஞா்களின் 15 அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் வெளியிடப்படும். தந்தை பெரியாா் குறித்த இலக்கியப் பதிவுகள் தொகுப்பாக வெளியிடப்படும். அரசின் துறைத் தோ்வா்களுக்காக 25 நூல்கள் வெளியிடப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கருத்தரங்கம் அமைக்கப்படும். பழுதடைந்து காணப்படும் 125 நூலகங்கள் ரூ.30 கோடி மதிப்பில் மறுகட்டமைப்பு செய்யப்படும். இணையான சான்றிதழ்: இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.