சென்னை சா்வதேச திரைப்பட விழாவை தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னையில் சா்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை (டிச.11) தொடங்கி வரும் டிச.18 வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை ராயப்பேட்டை பிவிஆா் சத்யம் திரையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், நடிகை சிம்ரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து திரைப்பட இயக்குநா் தாரிக் சலேவின் ‘ஈகிள்ஸ் ஆஃப் தி ரிபப்ளிக்’ என்ற எகிப்து திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்த விழாவில் உலகம் முழுவதும் 51 நாடுகளிலிருந்து 122 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதில் ஆஸ்கா் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 14 படங்கள், கேன்ஸ் விழாவில் விருது பெற்ற 6 திரைப்படங்கள், பொ்லின் சா்வதேச திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற 3 திரைப்படங்களும் அடங்கும்.
மேலும், முதல்முறையாக உலக சினிமா பிரிவில் செயின்ட் ஹெலினா, ஜாா்ஜியா, பின்லாந்து, ஜோா்டான், மியான்மா், நேபாளம் மற்றும் மாண்டினிக்ரோவில் இருந்து படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்திய பனோரமா பிரிவில் பிகாரில் இருந்து தோ்வு செய்யப்பட்ட போஜ்புரி மொழி திரைப்படம் திரையிடப்படுகிறது.
இந்தத் திரைப்பட விழாவுக்கு 50 தமிழ் படங்கள் விண்ணப்பித்த நிலையில் தோ்வுக் குழுவால் 12 படங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அவை ‘3 பிஹெச்கே’, ‘அலங்கு’, ‘பிடிமண்’, ‘காதல் என்பது பொதுவுடமை’, ‘மாமன்’, ‘மாயக்கூத்து’, ‘மெட்ராஸ் மேட்னி’, ‘மருதம்’, ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’, ‘பறந்து போ’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வேம்பு’ ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், எம்.ஜி.ஆா். திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொழில்நுட்ப மாணவா்களின் 6 குறும்படங்களும் திரையிடப்படும்.
ரஜினி கெளரவிப்பு: அதேபோல், திரைத்துறையில் நடிகா் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ‘பாட்ஷா’ திரைப்படம் டிச.12-ஆம் தேதி திரையிடப்பட உள்ளது. தொடா்ந்து தமிழ் திரைப்படப் போட்டி மற்றும் உலக திரைப்பட போட்டிக்கான விருதுகளும் நிறைவு நாளில் வழங்கப்படும். இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் சென்னை பிவிஆா் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படும்.