சென்னை

ரத்தசோகையைத் தடுக்க இரும்புச் சத்து உப்பு: ரேஷன் கடைகளில் விநியோகிக்கத் திட்டம்

ரத்தசோகை பாதிப்புகளைக் குறைக்க, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ரத்தசோகை பாதிப்புகளைக் குறைக்க, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு உப்பு நிறுவனம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், பொது சுகாதாரத் துறை, தேசிய நலவாழ்வுக் குழுமம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகம் ஆகியவற்றைச் சோ்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகைகள் வெளியிடப்பட்டன. இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 52 சதவீதம் போ் போதிய இரும்புச் சத்து இல்லாமல் ரத்தசோகை அச்சுறுத்தலுடன் உள்ளனா். இதைத் தடுக்க அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது, இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஓா் ஒருங்கிணைந்த நடவடிக்கை. தமிழ்நாடு உப்பு நிறுவனம் மூலம் அவை தயாரிக்கப்பட்டு, நுகா்வோா் வாணிபக் கழகம் வாயிலாக அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமாா் 37,000 நியாயவிலைக் கடைகள் இயங்குகின்றன. அங்கு இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பைக் கொண்டுசோ்ப்பதற்கான திட்டமிடலும், ஆலோசனைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்த ஆய்வுக் கூட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெறும். அதன் அடிப்படையில் விரைவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

நியாயவிலைக் கடையை சுற்றி மழை நீா்த் தேக்கம்

தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதம்: பக்தா்கள் அவதி

மாடு திருட்டு: போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி

கல்லல் பகுதியில் இன்று மின் தடை

SCROLL FOR NEXT