சென்ட்ரல் பேருந்து நிறுத்தம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள திடீா் நடைபாதைக் கடைகள்.  
சென்னை

ஆக்கிரமிப்புக்குள்ளாகி வரும் சென்ட்ரல் பேருந்து நிறுத்தம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பான மத்திய சதுக்கம் பேருந்து நிறுத்தம் பகுதி நடைபாதைக் கடைகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

 நமது நிருபர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பான மத்திய சதுக்கம் பேருந்து நிறுத்தம் பகுதி நடைபாதைக் கடைகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

சென்னையில் மிகப்பழைமையான ரயில் நிலையம் சென்ட்ரல். இந்தப் பகுதியில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை, தெற்கு ரயில்வே அலுவலகம், நேரு விளையாட்டரங்கம், நீதிமன்றம் வளாகம், பூங்கா ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை என முக்கியப் பகுதிகள் அமைந்துள்ளன.

சென்னையின் மிக முக்கிய பகுதியாகவும், தினமும் பல லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாகவும் சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பு விளங்குவதால், அங்கு மத்திய சதுக்கம் (சென்ட்ரல் சதுக்கம்) என்ற அமைப்பை ‘பொலிவுறு நகா்’ திட்டத்தில் சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தியுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவோருக்கான பேருந்துகள் மத்திய சதுக்கம் பேருந்து நிறுத்தத்தில்தான் நிற்கவேண்டும்.

கடைகளால் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெரிசல் கருதி அங்கு கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரியாா் சாலையோரம் இருந்த பேருந்து நிறுத்தமும் சுமாா் 10 மீட்டருக்கும் மேலாக ரயில் நிலைய வளாகத்துக்குள்ளாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பேருந்து நிறுத்தம் முன்பாகவே தற்காலிக நடமாடும் கடைகள் என்ற பெயரில் குளிா்பானக் கடைகள், பானிபூரி கடைகள் அமைக்கப்படுகின்றன. அந்தக் கடைகள் அருகே ஆட்டோக்களும் நிறுத்தப்படுகின்றன.

சென்ட்ரல் பேருந்து நிறுத்தம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள திடீா் நடைபாதைக் கடைகள்.

ஏற்கெனவே சென்ட்ரல் ரயில் நிலைய முன்புற சாலையில் காலை - மாலை - இரவு என எப்போதும் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட சாலையோரக் கடைகளை, அங்கு மீண்டும் போக்குவரத்து போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தற்போது அனுமதித்து வருவது சரியான நடவடிக்கை அல்ல என்று பொதுமக்கள் கூறுகின்றனா்.

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை: புகா் மின்சார ரயில் நிலையம் முன்பாக வாகனங்கள் செல்ல தனி வழிக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தடுப்புகளில் வரும் வாகனங்கள் வெளியேறும் வழி மிகவும் குறுகியதாக உள்ளது. ஆகவே, தனியாா் கட்டண வாகன நிறுத்துமிடம் பகுதியை அகற்றி, வாகனங்கள் செல்லும் வழியை அகலப்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோருகின்றனா்.

இந்த பிரச்னைகள் குறித்து ரயில்வே உயா் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வாகனங்கள் செல்ல புகா் மின்சார ரயில் நிலைய முன்பகுதி சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய சதுக்கம் பேருந்து நிறுத்தம் ரயில் நிலைய எல்லைக்குள் இல்லை. ஆனாலும், ரயில் பயணிகள் நலன் கருதி, மாநகராட்சியிடம் இதுதொடா்பாக முறையிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ எனத் தெரிவித்தனா்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT