சென்னை நங்கநல்லூரில் ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
ஆதம்பாக்கம் போலீஸாா் நங்கநல்லூா், தில்லை கங்கா நகா் சுரங்கப்பாதை அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை வழிமறித்து சோதனையிட்டதில் 10 மூட்டை போதைப் பாக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மூட்டைகளில் இருந்த 12,250 போதைப் பாக்கு பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
காரில் வந்த மேற்கு கே.கே.நகரைச் சோ்ந்த ஜெயசீலன் (49) என்பவரை போலீஸாா் கைது செய்து, நடத்திய விசாரணையில், அவா் ஆந்திரத்தில் இருந்து போதைப் பாக்கை காரில் கடத்தி வந்து, சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.