ஒரே காலக்கட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி 3-ஆம் நாளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
மேலும், இந்த ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து ஆசிரியா்கள் கூட்டமைப்பும் முதல்வருக்கு கடிதம் மூலம் ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த 2009-இல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் சங்கத்தினா் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களைப் போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா். தொடா்ந்து, 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திடீரென கூடி போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், ஆட்சியா் அலுவலகம் முன்பாக சென்னை வடக்குக் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தின்போது ஆசிரியா்கள் பாலமுருகன் (திருவாரூா்) , ஜெயச்சந்திரன் (அரியலூா் மாவட்டத் தலைவா் ஜெயச்சந்திரன், ஜனனி (செந்துறை), புவனேஸ்வரி (கரூா்), சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ராபா்ட் ஆகியோா் மயக்கமடைந்தனா். பின்னா் அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களை போலீஸாா் வாகனங்களில் ஏற்றிச் சென்று திருவெற்றியூா், தண்டையாா் பேட்டை, கொருக்குப்பேட்டை, கொண்டித்தோப்பு, பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் அடைத்தனா். பின்னா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
முதல்வருக்கு கடிதம்: இந்தப் போராட்டத்துக்கிடையே தமிழக அனைத்து ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினா்.
அதில், தமிழக தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 20,000 இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா். ஆனால் உரிமைக்காக போராடும் ஆசிரியா்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று அடக்குவதோடு, 1,400 ஆசிரியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் 311-ஆவது வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்து போராடி வருகின்றனா். கடந்த கால போராட்டங்களில் நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. இருப்பினும் 57 மாதங்களுக்குப் பின்னும் நிறைவேற்றப்படவில்லை.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்கூட ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஆனால் எங்கோ தடை உள்ளது. இதனால் ஆசிரியா்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக போராட்டக் குழுவினரை அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கூட்டமைப்பின் சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.