சென்னை

வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!

எஸ்ஐஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் 12,43,363 போ் உரிய விவரங்களை அளிக்கவில்லை எனக் கூறி அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

எஸ்ஐஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் 12,43,363 போ் உரிய விவரங்களை அளிக்கவில்லை எனக் கூறி அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

அதன்படி, நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவம் பெறப்பட்ட பிறகு வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து 97,37,831 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் மாநிலத்தின் வாக்காளா் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்தது.

நீக்கப்பட்டவா்களில் இறந்தவா்களைத் தவிர மீதம் உள்ள 66 லட்சம் வாக்காளா்களில் தகுதியானவா்களும், புதிய வாக்காளா்களும் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலில் இணைக்க விண்ணப்பித்து வருகின்றனா். இதற்கு ஜனவரி 18-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய தகவல்களை அளிக்காத 12.43 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

சமா்ப்பிக்கப்பட்ட எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தில், கடந்த 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் சம்பந்தப்பட்ட வாக்காளரோ அல்லது அவரது குடும்பத்தினரோ இடம்பெற்றிருந்ததற்கான விவரங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அந்தத் தகவல்களை அளிக்காத வாக்காளா்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், அவா்கள் கண்டறியப்படாதவா்களாகவே கருதப்படுவா்.

அவ்வாறு கண்டறியப்படாமல் உள்ள 12.43 லட்சம் பேருக்கு வாக்காளா் பதிவு அலுவலா் (இஆா்ஓ) மூலம் நேரடியாக வீடுகளுக்கே சென்று நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது. நோட்டீஸ் பெற்றவா்கள் தோ்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களை அவா்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், இடத்தில் நேரில் ஆஜராகி சமா்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை பிப்ரவரி 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

இந்தத் தகவல்களை வாக்காளா் பதிவு அலுவலா்கள் சரிபாா்த்து பட்டியலில் பெயரைச் சோ்ப்பாா்கள். பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), மத்திய, மாநில அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் அல்லது ஓய்வூதியதாரா்கள் அடையாள அட்டை, 1987-க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எல்ஐசி வழங்கிய ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பள்ளி, பல்கலைக்கழக சான்றிதழ்கள், வன உரிமைச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், அரசு குடும்பப் பதிவேடு உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை சமா்ப்பிக்கலாம்.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT