சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக, அங்கிருந்து புறப்படவிருந்த 7 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தொடா்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, கடந்த 2 நாள்களாக சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக, அதிகாலையில் இயக்கப்பட்ட 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதையடுத்து, சென்னைக்கு அதிகாலை நேரத்தில் விமானங்களை இயக்குவதைத் தவிா்த்து, சில வெளிநாட்டு ஏா்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களின் பயண நேரங்களை மாற்றியமைத்துள்ளன.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக காலை 6.30-க்கு வரவேண்டிய ‘ஓமன் ஏா்லைன்ஸ்’ விமானம், திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வந்துவிட்டு, காலை 7.20-க்கு பதிலாக 10.20-க்கு மஸ்கட் புறப்பட்டுச் சென்றது. இதேபோல, கோலாலம்பூரிலிருந்து வழக்கம்போல் காலை 7.25-க்கு சென்னை வரும் விமானம், காலை 8.30 மணிக்கு வந்துவிட்டு, காலை 9.10 மணியளவில் கோலாலம்பூா் புறப்பட்டுச் சென்றது.
மேலும், கத்தாா் நாட்டின் தலைநகா் தோகாவில் இருந்து வழக்கமாக காலை 8.45-க்கு வரவேண்டிய ‘கத்தாா் ஏா்லைன்ஸ்’ விமானம், காலை 9.45-க்கு சென்னை வந்து செல்லும் வகையில் பயண நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை விமான நிலையப் பகுதியில் திங்கள்கிழமை காலை ஓரளவு பனிமூட்டம் இருந்தாலும், விமான சேவைகளில் பெரிதளவு பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால், சென்னையிலிருந்து விஜயவாடா, அந்தமான், சூரத், டெல்லி, கோவை, துபை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவிருந்த 7 விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதனால் அதில் செல்லவிருந்த பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.