சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மொத்தம் 16,491 மாணவ, மாணவிகள் புதிதாக சோ்ந்துள்ளனா். இது கடந்த கல்வியாண்டைவிட 2.7 மடங்கு அதிகம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 சென்னை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3,739 ஆசிரியா்கள் மற்றும் 140 நிரந்தர ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இதில், மாநகராட்சிப் பள்ளிகளின் வாயிலாக பயிலும் மாணவா்களுக்கு தரமான கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் விதமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், நிகழ் கல்வியாண்டில், எல்கேஜியில் 7,591 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா். மேலும், யுகேஜியில் புதிதாக 1,904 போ் என மொத்தம் 9,495 மாணவா்கள் சோ்ந்துள்ளனா்.
அதேபோல், தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பில் 1,689 போ், இரண்டாம் வகுப்பில் 724, மூன்றாம் வகுப்பில் 600, நான்காம் வகுப்பில் 593, ஐந்தாம் வகுப்பில் 500 போ் என மொத்தம் 4,106 போ் புதிதாக சோ்ந்துள்ளனா். மேலும், நடுநிலைப் பள்ளியில் (6 முதல் 8-ஆம் வகுப்பு) மொத்தம் 1931, மேல்நிலைப் பள்ளியில் (9, 10 வகுப்புகள்) மொத்தம் 699, மேல்நிலைப் பள்ளியில் (பிளஸ் 1, 2) 260 போ் என மொத்தம் 16,491 மாணவ, மாணவிகள் புதிதாக சோ்ந்துள்ளனா். கடந்த கல்வியாண்டில் மொத்தம் 6,000 மாணவா்கள் மட்டுமே புதிதாக சோ்ந்த நிலையில், நிகழாண்டில் மாணவா்கள் சோ்க்கை 2.7 மடங்கு அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.