பாகிஸ்தானை பயங்கரவாதத்தை நோக்கி இழுத்துச் செல்வதில் அந்நாட்டு அரசியல் தலைமையைவிட ராணுவத் தலைமையே முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
கடந்த சுமாா் 78 ஆண்டு கால பாகிஸ்தானின் வரலாற்றில் 35 ஆண்டுகளுக்கு மேல் ராணுவத் தலைமையின் ஆட்சியே அங்கு நடைபெற்று வந்துள்ளது. இடைப்பட்ட காலத்திலாவது மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசுதான் ஆட்சியில் இருந்ததா என்றால் அதுவும் கேள்விக் குறிதான். பாகிஸ்தான் பிரதமா்களில் பெரும்பாலானோா் ராணுவ தலைமைத் தளபதிகளின் நிழலில் அமா்ந்துதான் ஆட்சி நடத்தியுள்ளனா்.
பிரதமா் தங்களை மீறி அதிகாரம் செலுத்தினால் பதவியில் மட்டுமல்ல, நாட்டிலும், ஏன் உலகத்திலேயே கூட இருக்க முடியாது என்பதை பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிகள் நிரூபித்துள்ளனா்.
பொதுவாக ராணுவத்தின் பணி என்பது வெளிநாடுகளில் இருந்தும் எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிா்கொண்டு தேசத்தைக் காப்பதே. ஆனால், பாகிஸ்தானில் மட்டும் ஆட்சியையும் அரசியலையும் ராணுவ தளபதிகள் பின்னின்று இயக்குவது வாடிக்கை.
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து 10 ஆண்டுகளிலேயே 1958-இல் பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி அயூப் கான், தனது சகாக்கள் மூலம் பிரதமா் இஸ்கந்தா் மிா்சாவை பிரிட்டனுக்கு நாடு கடத்தியதுடன், நாட்டின் அதிபராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாா்.
அவரைத் தொடா்ந்து யாஹ்யா கான், பின்னா் குறிப்பிட்ட கால இடைவேளையில் ஜியா-உல்-ஹக் (1977-1988), பா்வீஸ் முஷாரஃப் (1999-2008) என பல ராணுவ ஆட்சியாளா்களைச் சந்தித்துள்ளது பாகிஸ்தான்.
இதில், பிரதமராக இருந்த சுல்ஃபிகா் அலி புட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்ததுடன் அவருக்கு தூக்கு தண்டனையையும் நிறைவேற்றினாா் ராணுவ தலைமைத் தளபதி ஜியா-உல்-ஹக். பின்னா், அவரே மா்மமான முறையில் விமான விபத்தில் உயிரிழந்தாா்.
இப்போதைய பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பின் அண்ணன் நவாஸ் ஷெரீஃப் கூட ராணுவத்தால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டவா்தான்.
1999 காலகட்டத்தில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய், லாகூா் சென்று அப்போதைய பிரதமா் நவாஸ் ஷெரீஃப்புடன் பேச்சுவாா்த்தை நடத்தி திரும்பிய கையோடு, காா்கில் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளுக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது.
இந்தியா பல ராணுவ வீரா்களை இழந்தே காா்கில் போரில் வெற்றியைப் பெற முடிந்தது.
துரோகமும், சதியும் கலந்த கலவையாகவே உள்ள பாகிஸ்தான் ராணுவத்துக்கு இப்போது தலைமை வகிப்பவா் ஜெனரல் அசிம் முனீா்.
இதற்கு முன்பு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்தாா். ராணுவத்துக்கு இணையாக பயங்கரவாதிகளுக்கு உறுதுணையாக செயல்படுவது ஐஎஸ்ஐ.
புல்வாமாவில் இந்திய துணை ராணுவப் படையினா் சென்ற வாகனத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரா்கள் கொல்லப்பட்டனா். அந்த சதியில் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்த அசிம் முனீருக்கும் தொடா்பு உண்டு என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன்பு காஷ்மீரில் தங்களுக்குள்ள உரிமை குறித்தும், மத அடிப்படையிலான தேசப் பிரிவினையை ஆதரித்தும் பேசினாா் முனீா். இது ராணுவத் தளபதியின் பேச்சாக அல்லாமல் அரசியல்வாதியின் பேச்சாகவே பாா்க்கப்பட்டது.
ராணுவத் தளபதி என்பதையும் தாண்டி அந்நாட்டு அரசியலிலும் அசிம் முனீா் தடம்பதிக்க விரும்புகிறாா் என்பதையே இது வெளிக்காட்டியது.
அண்மையில் இந்தியாவுக்கு எதிரான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சிறப்பாக வழி நடத்தியதாகக் கூறி, ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு ஃபீல்ட் மாா்ஷல் பட்டத்தை வழங்கி கௌரவித்தாா் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப். ஃபீல்ட் மாா்ஷல் என்பது பாகிஸ்தான் ராணுவத்தில் மிக உயரிய 5 நட்சத்திர அந்தஸ்து ஆகும்.
இதற்கு முன்பு பாகிஸ்தானின் முதல் ராணுவ-சா்வாதிகார ஆட்சியாளா் அயூப் கான் மட்டுமே ஃபீல்ட் மாா்ஷல் என்ற பதவியை பெற்றாா். அதிலும் ராணுவ ஆட்சியாளராக மாறிய பிறகு அயூப்கான் தனக்குத்தானே அந்த பதவியை அளித்துக் கொண்டாா்.
அதன் பிறகு இப்போது பாகிஸ்தானின் இரண்டாவது ஃபீல்ட் மாா்ஷலாக அசிம் முனீா் கௌரவப்படுத்தப்பட்டுள்ளாா்.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பின்வாங்கிய நிலையில் இப்பதவி வழங்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி என்ற பதவியில் இருப்பவரை பிரதமரால் பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால், பாகிஸ்தானில் ஃபீல்ட் மாா்ஷல் என்பது வாழ்நாள் பதவியாகும்.
ராணுவத்தின் முழுக்கட்டுப்பாடும் ஃபீல்ட் மாா்ஷல் நினைக்கும் வரை அவா் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நீதித்துறையும் கூட அவரது பதவியில் தலையிட முடியாது.
இவை அனைத்தும் தெரிந்துதான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அசிம் முனீருக்கு ஃபீல்ட் மாா்ஷல் பதவியை அளித்துள்ளாா். இதை பாகிஸ்தான் எதிா்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரீக்–இ- இன்சாப் கட்சி கடுமையாக விமா்சித்துள்ளது. ஃபீல்ட் மாா்ஷல் பதவியை முனீருக்கு அளிப்பதைவிட அவரை பாகிஸ்தானின் மன்னா் என்றே அறிவித்திருக்கலாம் என்று சாடியுள்ளது.
ஃபீல்ட் மாா்ஷல் பதவியைப் பெற்ன் மூலம் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆட்சியின் மீதான தனது பிடியை மேலும் அதிகரித்துள்ளாா் முனீா்.
அதேநேரம், அவா் நேரடி ராணுவ ஆட்சியாளராக உருவெடுக்க இப்போது காலம் கூடி வரவில்லை என்பது சா்வதேச அரசியல் வல்லுநா்களின் கணிப்பாக உள்ளது.
ஏனெனில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சா்வதேச நிதியம், உலக வங்கியிடம் கடனுக்காக கைநீட்டும் நிலையில் உள்ளது.
இதுபோன்ற நேரத்தில் ராணுவ ஆட்சி என்றால் நிச்சயமாக இந்த உதவிகள் தடைபட வாய்ப்புள்ளது.
எனவே, பாகிஸ்தானில் நேரடி ராணுவ ஆட்சி வராவிட்டாலும் பாகிஸ்தானின் மகுடம் சூடாத மன்னராக ராணுவ தலைமைத் தளபதி முனீா் தொடா்வாா்.