பெசன்ட் நகரில் கடல் அலையில் சிக்கி மாயமான மாணவரின் உடல் பட்டினம்பாக்கம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது.
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படிக்கும் 14 மாணவ- மாணவிகள், பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரைக்கு சனிக்கிழமை சென்றனா். அவா்களில் கவி பிரகாஷ் (21), ரோகித் சந்திரன் (21), முகமது ஆதில் (21) ஆகிய 3 போ் ராட்சத அலையில் சிக்கிக்கொண்டனா்.
இதையடுத்து அங்கிருந்த மீனவா்கள் உதவியுடன், கவிபிரகாஷ், முகமது ஆதில் ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டனா். இதில் மூச்சுத்திணறல் காரணமாக கவிபிரகாஷ் உயிரிழந்தாா்.
முகமது ஆதில் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ரோகித் சந்திரா கடலில் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா். அவரை போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் தேடி வந்தனா்.
இந்த நிலையில், பட்டினம்பாக்கம் கடற்கரையில் ரோகித் சந்திரனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. பட்டினம்பாக்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.