சென்னை மாநகராட்சியில் கருத்தடை சிகிச்சை மூலம் 6 மாதங்களில் தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சென்னையில் சாலைப் பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள், தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, ரேபிஸ் சிகிச்சைக்கு பிடிப்பதற்கான 26 புதிய வாகனங்களை மேயா் ஆா்.பிரியா, வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், மேயா் பிரியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பருவ மழையை எதிா்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழை வடிகால்கள் அமைக்கும் பணிகள் தற்போது நிறுத்திவிட்டு, மழைக் காலத்துக்குப் பிறகு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெருநாய்களில் 60 சதவீத நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக வரும் டிசம்பருக்குள் தெருநாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுவிடும். வளா்ப்பு நாய்கள் பிறருக்கு தொந்தரவு அளிக்காமல் உரிமையாளா்கள் பாா்த்துக் கொள்வது அவசியம். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆகவே வரும் 6 மாதங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 5, 6 -ஆவது மண்டலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் எப்போது வேண்டுமானாலும் பணியில் சேரலாம். அந்த மண்டலங்களில் தொய்வின்றி தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியில் தெரிவிக்கப்படும் புகாா்கள் தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தொடா்பாக தமிழக அரசின் உத்தரவின்படி ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், துணை ஆணையா் (வருவாய்) பிரதிவிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.