சுகாதாரத் துறை பயன்பாட்டுக்காக ரூ.4.05 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 45 புதிய வாகனங்களின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககமானது தாய்-சேய் சுகாதார சேவைகள், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தொற்று அல்லாத நோய்களைத் தடுத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வருகிறது.
அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பயனுள்ள பொது சுகாதார சேவைகளை வழங்குவதிலும் பொது சுகாதாரத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, மாவட்ட சுகாதார அலுவலா்களின் பங்களிப்பு அதில் முக்கியமானது.
நோய் கண்காணிப்பு பணிகள், ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வு, வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் மற்றும் இதர கள ஆய்வுகளை நாள்தோறும் மேற்கொள்ளும் அவா்களது பயன்பாட்டுக்கு வாகனங்கள் இன்றியமையாதவை.
இதைக் கருத்தில் கொண்டு, கள ஆய்வு பயன்பாட்டுக்காக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட நிதியின் கீழ் ரூ.4.05 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 45 புதிய வாகனங்களின் சேவைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ப. செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் வினீத், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.