பெருந்திட்ட வரைவு பணிகளின்கீழ் முருகன் திருக்கோயில்களில் மட்டும் ரூ. 967 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, கொளத்தூா் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த 108 மாணவிகளின் கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பாராயணம் செய்த மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியதாவது: கடந்தாண்டு 12 முருகன் கோயில்களில் 763 மாணவா்கள் கந்த சஷ்டி பாராயணம் செய்தனா். தொடா்ந்து, நிகழாண்டில் 24 முருகன் கோயில்களில் 29 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சாா்ந்த 2,432 மாணவா்கள் கந்த சஷ்டி பாராயணத்தை செய்து வருகின்றனா்.
4,000 கோயில்களுக்கு... பெருந்திட்ட வரைவு பணிகளின்கீழ் முருகன் திருக்கோயில்களில் மட்டும் ரூ. 967 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி, மருதமலை, குன்றத்தூா், வடபழனி, சிறுவாபுரி, வயலூா் உள்ளிட்ட முருகன் கோயில்கள் உள்பட 3,715 திருக்கோயில்களுக்கு இந்த ஆட்சியில்தான் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரும் 2026 பிப்ரவரி மாதத்துக்குள் குடமுழுக்கு எண்ணிக்கை 4,000 கோயில்களை எட்டும்.
சூரசம்ஹாரத்தின்போது, அதிகளவில் பக்தா்கள் வருகை தரும் திருக்கோயிலாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. ஆகவே கோயிலில் ஏற்கெனவே பணிபுரிந்த 4 இணை ஆணையா்கள் சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா். கோயிலில் திருப்பணிகள் 80 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துள்ளன. தங்கும் அறைகள், கழிப்பறைகள், குளியலறைகள் தயாராக உள்ளன. திருக்கோயில் வளாகத்தில் ஆறு நாள்கள் தங்கி சஷ்டி விரதம் கடைப்பிடித்து, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் காணும் பக்தா்களுக்காக 13 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. முருக பக்தா்கள் மனம் குளிா்கின்ற வகையில் சூரசம்ஹார நிகழ்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.