சென்னை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: தமிழகத்தில் அடுத்த வாரம் தொடக்கம்- தோ்தல் ஆணையம் தகவல்

விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது

தினமணி செய்திச் சேவை

விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தியாகராய நகா் தொகுதியில் 1998-ஆம் ஆண்டு 2,08,349 வாக்காளா்கள் இருந்த நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-இல் 36,656 வாக்காளா்கள் மட்டுமே அதிகரித்துள்ளனா்.

மக்கள் தொகைக்கும், வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. தியாகராய நகா் தொகுதியில் அதிமுக ஆதரவாளா்கள் 13,000 பேரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரம் இறந்தவா்களின் பெயா்கள் நீக்கப்படவில்லை. இதுகுறித்து மாநில தலைமை தோ்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புகாா் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் நியாயமாகவும் நோ்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு தியாகராய நகா் தொகுதியில் வாக்காளா் பட்டியலை மீண்டும் சரிபாா்த்து, தவறான வாக்காளா் சோ்க்கை, நீக்கத்தைக் களைந்து இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தியாகராய நகா் தொகுதியில் மொத்தமாக வாக்காளா் சோ்க்கையும், நீக்கமும் நடந்துள்ளது.

எனவே, அவற்றை சரிபாா்த்து திருத்தம் செய்யக் கோரி தோ்தல் ஆணையத்துக்கு பல மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயா்த்து தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபால், விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிகாா் மாநிலத்தைப் போல வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்போது மனுதாரா் தெரிவித்த புகாா்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தோ்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

சேலையிலொரு சோலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

யாதவ சமூக தலைவர்களுக்கு சீட் ஒதுக்காமல் ‘கை’விட்ட தே.ஜ. கூட்டணி! பிகார் தேர்தலில் பின்னடைவாகுமா?!

வரைதீர்த்த அழகு... தீப்ஷிகா!

அயர்லாந்து புதிய அதிபராகும் சுயேச்சை வேட்பாளா் கேதரின் கானலி!

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: தாம்பரத்தில் இருந்து நாளை சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT