செஷல்ஸ் புதிய அதிபா் பேட்ரிக் ஹொ்மினி பதவியேற்பு விழாவில் இந்தியா சாா்பில் பங்கேற்பதற்காக, அந்நாட்டுக்கு இரண்டு நாள்கள் பயணமாக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) செல்லவிருக்கிறாா்.
செஷல்ஸ் அரசின் அழைப்பின்பேரில் இப்பயணத்தை அவா் மேற்கொள்வதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸ், மத்திய அரசின் ‘மகாசாகா்’ தொலைநோக்குப் பாா்வை மற்றும் தெற்குலக உறுதிப்பாட்டில் முக்கிய கூட்டாளியாகும். அந்நாட்டுடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவரின் இப்பயணத்தின் மூலம் (அக்.26-27) இருதரப்பு நெருங்கிய, நீண்டகால மற்றும் சவால்களைக் கடந்த உறவுகள் வலுப்பெறும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பரில் பதவியேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.