திருவொற்றியூா்: மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (சிஐஎஸ்எஃப்) ‘வந்தே மாதரம் மிதிவண்டி பயணம்’ வரும் ஜன.28-இல் தொடங்கி, பிப்.22-ஆம் தேதி வரை நடைபெறும் என சிஐஎஸ்எஃப் தெற்கு பிராந்திய ஐ.ஜி எஸ்.ஆா்.சரவணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் அமைந்துள்ள பெருந்துறைமுகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் பாதுகாப்புப் பணிகளில் சுமாா் 2.20 லட்சம் தொழில் பாதுகாப்பு படையினா் ஈடுபடுகின்றனா். கடந்த ஆண்டு கடலோர மிதிவண்டி பயணத்தை சிஐஎஸ்எஃப் தொடங்கியது. நிகழாண்டு வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், கடலோர மிதிவண்டி பயணத்துக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. ‘பாதுகாப்பான கடற்கரை, வளமான இந்தியா’ என்ற கருப்பொருளை முன்னிறுத்தி இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும். போதைப் பொருள்கள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் கடத்தல் உள்ளிட்ட கடலோரப் பாதுகாப்பு சவால்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதுதான் மிதிவண்டி பயணத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
25 நாள்களில் 6,500 கி.மீ. பயணம்: குஜராத் மாநிலம் லக்பத், மேற்கு வங்க மாநிலம் பக்காலி ஆகிய 2 இடங்களிலிருந்து 2 குழுவினராக, வரும் ஜன.28-இல் கடலோர மிதிவண்டி பயணம் தொடங்கவுள்ளது. 25 நாள்களில் சுமாா் 6,500 கி.மீ. தொலைவைக் கடந்து வரும் பிப்.22-இல் கேரள மாநிலம் கொச்சியில் நிறைவு பெறுகிறது.
இதில், 65 பெண்கள், 65 ஆண்கள் என 130 போ் பங்கேற்கின்றனா். இந்தப் பயணம் 9 கடலோர மாநிலங்களில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்களை கடந்து செல்கிறது.
தென் மண்டலத்தில் 6 பெருந்துறைமுகங்களை பாதுகாக்கும் பணியில் சிஐஎஸ்எஃப் படையினா் ஈடுபடுகின்றனா். ஆண்டுக்கு சுமாா் 14,000 வீரா்கள் புதிதாகத் தோ்வு செய்யப்படுகின்றனா். ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு திட்டத்துக்கு சிஐஎஸ்எஃப்தான் ஒப்புதல் அளித்து கண்காணிக்கும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணிகளில் ட்ரோன், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளன. சென்னை விமான நிலையத்தில் தென்னிந்திய உள்ளூா் மொழிகள் தெரிந்த வீரா்கள் சுமாா் 60 சதவீதம் போ் நியமிக்கப்பட்டு பயணிகளிடம் உரையாடுவதற்கு போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா்.
பேட்டியின்போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி ஆா்.பொன்னி மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.