குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநா் அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிக்கவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழகத்துக்கு எதிராகவே உள்ளன. மேலும், தமிழகத்துக்கு தரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்திருக்கிறது.
பல்வேறு வகையில் மாநில உரிமைகளுக்கு எதிராகவே ஆளுநா் செயல்பட்டு வருகிறாா். தன்னுடைய பொறுப்பை மறந்து மாா்க்சியம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களின் மீது வன்மத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கிறாா்.
எனவே, ஆளுநரின் குடியரசு தின விழா தேநீா் விருந்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கவுள்ளதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.