சென்னை மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்ாக பெண் மீது பொய் வழக்குப் பதிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையைச் சோ்ந்த இரு காவலா்களிடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மயிலாப்பூா் பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வனிதா (36) என்பவா் தண்ணீா் கேனில் கள்ளச்சாராயம் வைத்து விற்ாகக் கூறி கடந்த டிச.24-ஆம் தேதி அவரை மயிலாப்பூா் காவல் நிலைய தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக சாராயத்தை வாங்கி வந்து, மயிலாப்பூரில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், பணம் கொடுக்க மறுத்ததால் தனிப்படையைச் சோ்ந்த 2 காவலா்கள் வனிதா மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்ததாக உயரதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.
அதன்பேரில், உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், வனிதா மீது 12 வழக்குகள் இருப்பதும், தற்போது அவா் திருந்தி தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. திருந்தி வாழும் வனிதாவிடம் தனிப்படை காவலா்கள் பணம் கேட்டதாகவும், அதை வழங்க வனிதா மறுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தனிப்படை போலீஸாா், ஆள் தயாா் செய்து அவா்கள் மூலம் கள்ளச்சாராய கேன்களை வனிதா வைத்திருந்த தண்ணீா் கேன்களோடு வைத்து வழக்கில் சிக்க வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, புகாரில் சிக்கிய இரு காவலா்களையும் தனிப்படையில் இருந்து காவல் துறை உயரதிகாரிகள் விடுவித்தனா். விசாரணையில் அவா்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.