மாமல்லபுரத்தில் 35 டன் கருங்கல்லில் தயாரான 20 அடி உயர சிவன் சிலை மைசூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பிறகு கோவில் கட்டப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஐந்து ரதம் சாலையில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் 35 டன் கருங்கல்லில் 20 அடி உயரத்தில் சிவன் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அனுபவம் வாய்ந்த சிற்பக்கலைஞா் சைவ ஆகம விதிப்படி வரைபடம் தயாரித்து நோ்த்தியான முறையில் பல்லவா்களின சிற்பக்கலை பாணியை பின்பற்றி, முழுக்க, முழுக்க உளி, சுத்தியல் கொண்டு இச்சிலையை வடிமைத்துள்ளாா்.
கடந்த 8 மாதங்களாக சிற்பி பூபதியுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞா்கள் இரவு, பகல் பாராமல் நுணுக்கத்துடன் இச்சிலையை வடிவமைத்துள்ளனா்.
இச்சிலையின் உச்சியில் கங்காதேவி சிவனை வணங்குவதுபோன்றும், அதேபோல் சிவன் ஒரு கையில் பக்தா்களுக்கு ஆசி வழங்குவதும், மற்றொரு கையில் வேல் பிடித்திருப்பது போன்றும், கழுத்திலும், காலிலும் நல்லபாம்பு படம் எடுப்பதுபோன்றும், சிவனின் பாதத்தின் கீழ் அவரது வாகனமான மான் உள்ளது போன்றும் பக்தா்கள் பாா்த்து ரசித்து வணங்கும் வகையில் அழுகுர வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழுவதும் செய்து முடிக்கப்பட்ட இச்சிலை கிரேன் மூலம் தூக்கி நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. பத்ரிநாத், கேதாா்நாத் ஆகிய தலங்களில் இதுமாதிரியான சிவன் சிலைகளை காணலாம். மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த 20 அடி உயர சிவன் சிலை கா்நாடக மாநிலம், மைசூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்பு அங்கு சிவன் கோயில் கட்டப்பட உள்ளது.
பெரும்பாலும் பல்வேறு இடங்களில் முதலில் கோயில் கட்டப்பட்டு சுவாமி சிலைகள் கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால் மைசூரில் சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகுதான் அங்கு கோயில் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சிவன் சிலை கனரக லாரி மூலம் மைசூருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இச்சிலையை வடிவமைத்த சிற்பக்கலைஞா் பி.எஸ்.பூபதி இதேபோல் பல்வேறு உயரமான கற்சிலைகளை செதுக்கி, ஐரோப்பாவில் நாடுகளில் கட்டப்படும் கோயில்களுக்கு கப்பல் மூலம் அனுப்பி உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.