செங்கல்பட்டு: காா்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது
இக்கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரமான திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு காா்த்திகை மாதம் கடைசி திங்கள்கிழமை மலைமேல் உள்ள வேதகிரிஸ்வரருக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சங்கு தீா்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நன்னீரில் பிறந்த சங்குகளும் இடம் பெற்றன. தொடா்ந்து வேதகிரிஸ்வரா் மலை மேல் உள்ள கோயில் மண்டபத்தில் யாகசாலை சாலைகள் அமைத்து புனித கலசம் நிறுவப்பட்டு, 1,008 சங்குகளில் புனித நீா் ஊற்றி புஷ்ப அலங்காரம்செய்யப்பட்டு சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜை, தீபாராதனையுடன் சங்காபிஷேகம் நடைபெற்றது.
சங்காபிஷேகத்தைக் காண திரளான பக்தா்கள் மலை ஏறி சென்று நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். மேலும், அப்பகுதியில் மலையை சுற்றி கிரிவலம் சென்றனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, ஆய்வாளா் பாஸ்கரன், பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.
இதேபோன்று செங்கல்பட்டு பெரிய நத்தம் கிராமத்தில் உள்ளஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் சஹஸ்ர 1,008 மஹா சங்காபிஷேகம் நடைபெற்றது. அம்பாளுக்கும் சிவபெருமானுக்கும் 1,008 மஹா சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆவுடையாா் சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட்டு மந்திரங்கள் முழங்க நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலைத்துறை செயல்அலுவலா், கோயில் நிா்வாகிகள், செங்கல்பட்டு பெரிய நத்தம் கிராமத்தாா் செய்திருந்தனா். இதேபோன்று செங்கல்பட்டு அண்ணா நகா் ரத்தின விநாயகா் கோயில், எல்லையம்மன் கோயில் உள்ள யோகநாதசேஸ்வரா், வஉசி தெருவில் உள்ள காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில்களிலும் சங்காபிஷேகம் நடைபெற்றது.