விற்பனைக்கு வராத ரயில்வே கால அட்டவணை!
சென்னை, நவ. 17: தெற்கு மண்டல அளவிலான ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டு 18 நாள்களுக்கு மேல் ஆகியும் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. ரயில்களின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல
சென்னை, நவ. 17: தெற்கு மண்டல அளவிலான ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டு 18 நாள்களுக்கு மேல் ஆகியும் இதுவரை விற்பனைக்கு வரவில்லை.
ரயில்களின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கூட ரயில்வே கால அட்டவணையின் ஒரு பிரதி கூட இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த ரயில்வே கால அட்டவணை எங்கு கிடைக்கும் என்பது குறித்தும் ரயில்வே அதிகாரிகள் இதுவரை "மெüனம்' காத்து வருகின்றனர்.
ரயில்வே கால அட்டவணைகளை தெற்கு ரயில்வே ஆண்டுதோறும் தயாரித்து வெளியிட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதன்முறையாக தெற்கு மண்டல அளவிலான ரயில்வே கால அட்டவணையை செகந்திராபாதை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரயில்வே தயாரித்தது.
இதில் தெற்கு ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வே, கொங்கண் ரயில்வே, தென் மேற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மணடலங்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவை விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், கோவா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் சேவை குறித்து அறியலாம்.
நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள ரயில் சேவைகள், நேரம் மற்றும் புதிய ரயில் சேவைகள், நீட்டிப்பு ஆகியவை குறித்த விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
ரயில் வழித்தடங்களின் வண்ண வரைபடத்துடன் 365 பக்கங்கள் கொண்டதாக ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட இந்த கால அட்டவணையின் விலை ரூ.30.
இந்த கால அட்டவணையை கடந்த அக்டோபர் 30-ம் தேதி சென்னையில் ரயில்வே துறை இணை அமைச்சர் இ.அகமது வெளியிட்டார்.
ஆனால், இதன்பின் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி.யின் அங்கீகாரம் பெற்ற புத்தகக் கடைகளில் ஒரு பிரதி கூட விற்பனைக்கு வைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
ரயில் பயணிகள் கோரும் பட்சத்தில், அகில இந்திய அளவிலான ரயில் சேவைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள "டிரெய்ன் அட் ஏ கிளான்ஸ்' என்ற கால அட்டவணையை மட்டுமே ரூ.35-க்கு விற்பனையாளர்கள் வழங்கி வருகின்றனர். விற்பனை முடக்கம் ஏன்? தெற்கு மண்டல ரயில்வே கால அட்டவணையை அச்சிட்டு விநியோகிக்கும் உரிமை, இம் முறை சென்னை கிண்டியில் உள்ள தனியார் அச்சகத்துக்கு ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால அட்டவணையில் போதிய அளவு விளம்பரங்கள் சேகரிக்கப்படாததால், வருவாய் அளவு மிகவும் குறைந்துள்ளது.
இதையடுத்து, இழப்பை ஈடுகட்டும் வகையில் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழில் கால அட்டவணை வெளியாகுமா? 3 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே கால அட்டவணையை வட்டார மொழிகளிலும் வெளியிட ரயில்வே துறை முடிவு செய்தது.
இதன்படி பல்வேறு விவரங்கள் தொகுக்கப்பட்டு எளிமையான வகையில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னக மொழிகளில் ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதற்கு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதன்பின் இதுவரை தமிழில் கால அட்டவணை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், மீண்டும் தமிழில் ரயில்வே கால அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என ரயில்வே துறை இணை அமைச்சர் இ.அகமது, தெற்கு ரயில்வே பொது மேலாளர் எம்.எஸ்.ஜெயந்த் ஆகியோர் அறிவித்தனர். ஆனால், இதுவும் "ஏட்டுச் சுரைக்காய்' போல வெறும் அறிவிப்புடன் நிற்கிறது. இது தெற்கு ரயில்வே மீதான நம்பகத் தன்மையை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.