முகப்பு
சென்னை

150 புதிய பட்டாசு ரகங்கள் அறிமுகம்

சென்னை, அக். 5:  தீபாவளி சீசனுக்காக 150 வகையான புதிய பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.   இதில் வாண வெடிகளின் விலை 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.   சென்னையில் மட்டும் இந்த ஆண்டு ரூ. 350 கோடிக்கு

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:51 PM
பகிர்:

சென்னை, அக். 5:  தீபாவளி சீசனுக்காக 150 வகையான புதிய பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  இதில் வாண வெடிகளின் விலை 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

  சென்னையில் மட்டும் இந்த ஆண்டு ரூ. 350 கோடிக்கு பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

  எனினும் சிவகாசி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் குளோரைட் பற்றாக்குறை, தீ விபத்துகளால் சேதம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் சிறிய ஆலைகள் பல மூடப்பட்டுள்ளன.

  இதன் காரணமாக மலிவு விலை பட்டாசுகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், சிறு வியாபாரிகள் இந்த ஆண்டு சாலையோரக் கடைகளில் பட்டாசு விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

  இதுகுறித்து சென்னை பட்டாசு மொத்த வியாபாரிகள் நலச்சங்கத்தின் செயலாளர் எஸ்.கே. அப்பாஸ் மற்றும் பட்டாசு மொத்த விற்பனையாளர் ஏ. சையத் சுல்தான் ஆகியோர் கூறியது:

  சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உரிமம் பெற்ற பட்டாசு மொத்த வியாபாரிகள் 160-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

  இந்த ஆண்டு முதல் மொத்த வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான பட்டாசுகளை கொள்முதல் செய்து, நகருக்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என அரசு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

  விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

  இதனால் பிராட்வே, தாம்பரம், புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்த முறை அதிக அளவு பட்டாசுகளை தங்களது கடைகளில் கொள்முதல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

  சீன பட்டாசுகளுக்கு வரவேற்பு இல்லை...இதே போல சீனத் தயாரிப்பு பட்டாசுகள் தரமற்றதாக இருப்பதால், பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு அவற்றை வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை என்றனர்.

  எனினும், சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை சீசன் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் இது உச்சத்தை எட்டும்.

  இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ள 150 புதிய பட்டாசு ரகங்களில் வாண வெடிகளே அதிக எண்ணிக்கையில் உள்ளன. புதிய பட்டாசு ரகங்களின் விவரம்:

  "மெகா' சர வெடிகள்:   பத்தாயிரம் வாலா சர வெடிகள் ரூ. 3,500-க்கு விற்கப்படுகின்றன. இதில் 5 ஆயிரம் சரவெடிகளின் விலை ரூ. 1,750.

  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப அதிக சத்தத்துடன் வெடிக்கும் சின்னஞ்சிறு 100 "பிஜிலி' வெடிகளின் விலை ரூ. 30.

  இதர வெடிகளின் விலை விவரம் (ரூபாயில்..): 5 முறை வெடிக்கும் பொம்மை வெடி- 13.

  12 முறை வானில் வெடித்துச் சிதறி வண்ண மழை பொழியும் வாண வெடிகள்:  ரெயின்போ தண்டர், பியூட்டிஃபுல் ஃபிளவர்ஸ், சன் பிளவர்ஸ், -ஃபயர் ஃபால்ஸ், ரோஸ் கார்டன், கிரீன் கார்டன் ரூ. 130.

  அந்திமழை போல் உருகி விழும் வாண வெடி- மூன் டிராப்ஸ்- 190, வானில் நீல நிற டால்ஃபின் மீனைப் போல, துள்ளிப் பாயும் வாண வெடி டால்ஃபின் டைவ்- ரூ. 160.

  இசை சங்கமாக ஒலி எழுப்பி வெடிக்கும் "மியூசிக் பார்ட்டி'- 150.

   ராக்கெட் ரகங்கள்:  "கிரீட்டிங்ஸ்'-வண்ணத்துப் பூச்சி போல பறந்து (சிவப்பு-நீல ஒளியுடன் கூடிய புகையைக் கக்கியவாறு வானில் பாயும் இந்த ராக்கெட்.

  சக்கரம் போல சீறிப் பாயும் டெல்ட்டா, விசில் சத்தத்தை எதிரொலிக்கும் எக்கோ ஆகிய ராக்கெட்டுகள் 5-ன் விலை ரூ.200.

  இதே போன்ற துருவ ஏவுகணைகள், புயல், வைக்கிங், ரோட்டார், கிரீன் பீ, ஜெரிக்கோ, சிவப்பு புகையுடன் பாயும் புரோட்டான் என இந்த ஆண்டு 22 வகையான ராக்கெட் வெடிகள் வந்துள்ளன. இந்த ராக்கெட்டுகளின் விலை 200.

  கண்ணுக்கும், காதுக்கும் இரட்டை மகிழ்ச்சி தரும் "டபுள் ஹேப்பினஸ்' வாண வெடிகளின் அணி வகுப்பு இதோ...

  வின்டர் குளோ, லக்கி மேன், ஆட்டம், ஸ்பிரிங் பிளவர்ஸ், சம்மர் சைன், ஸ்னோவ் பால், குட் டே, லக்கி ஸ்டார், குட் நைட் என பட்டியல் நீள்கிறது. இவற்றின் விலை தலா ரூ. 240.

  ஜம்பிங் அட்டாக், மெர்குரி அட்டாக்...என்ற நூதன வாண வெடிகளும் பட்டாசுப் பிரியர்களை நிச்சயம் கவரும்.

  ரூ.10 முதல் ரூ. 10,000 வரை பட்டாசு ரகங்கள் இம் முறை குவிக்கப்பட்டுள்ளன. நடுத்தரக் குடும்பங்கள் சிக்கன விலையில் பட்டாசுகளை வாங்க ரூ. 110 முதல் ரூ. 1,150 வரை "கிஃப்ட் பாக்ஸ்' பெட்டிகளும் அமோகமாக விற்பனையாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.