வீட்டுக் கடன்: ரூ. 9,774 கோடி வழங்கி எஸ்.பி.ஐ. சாதனை
சென்னை, ஜன. 8: பாரத ஸ்டேட் வங்கி தமிழகம், புதுவையில் இதுவரை ரூ.9,774.30 கோடி வீட்டுக்கடன் வழங்கியுள்ளது என்று உள்ளூர் தலைமை அலுவலக (சென்னை) தலைமைப் பொது மேலாளர் ஜே. சந்திரசேகரன் தெரிவித்தார். இதன் மூ
சென்னை, ஜன. 8: பாரத ஸ்டேட் வங்கி தமிழகம், புதுவையில் இதுவரை ரூ.9,774.30 கோடி வீட்டுக்கடன் வழங்கியுள்ளது என்று உள்ளூர் தலைமை அலுவலக (சென்னை) தலைமைப் பொது மேலாளர் ஜே. சந்திரசேகரன் தெரிவித்தார்.
இதன் மூலம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 327 பேர் பயனடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள எம்.ஆர்.சி. மையத்தில் "எஸ்.பி.ஐ. வீட்டுவசதி கண்காட்சி' வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் 28 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இடத்தில் உள்ள வில்லங்கம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க வங்கி சார்பில் வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்த ஜே. சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது:
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஆண்டுதோறும் வீட்டுவசதி கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னை தவிர தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புதுவையிலும் இது போன்ற கண்காட்சி நடத்தப்படுகிறது.
வீடு வாங்க விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அவரவர் வருமானத்துக்கேற்ப கடன் தொகை நிர்ணயிக்கப்படும். ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான கடனுக்கு முதல் வருடத்தில் 8.5 சதவீத வட்டியும், 2, 3-ம் ஆண்டுகளில் 9.25 சதவீத வட்டியும், அதன் பிறகு வரும் ஆண்டுகளுக்கு 9.75 சதவீத வட்டியும் கணக்கிடப்படும். அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை கடனை திரும்பச் செலுத்தும் வசதி உள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2010-2011) 2010 டிசம்பர் 31 வரை ரூ.1,724.24 கோடி வீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் ரூ.2,400 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் சந்திரசேகரன்.