முகப்பு
வணிகம்

11 மாதம் குறைந்த நிலையில் நிஃப்டி; சென்செக்ஸ் 1,342 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 1,342.27 புள்ளிகள் சரிந்து 76,863.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 394.75 புள்ளிகள் சரிந்து 23,866.85 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 11 மார்ச், 2026 at 12:19 PM
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், நேற்றைய அமர்வில் வலுவான மீட்சிக்குப் பிறகு, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தை மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளானது. நிஃப்டி 11 மாதம் என்ற குறைந்த நிலைக்கு சென்ற நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 2 சதவீதம் சரிந்து முடிவடைந்தன.

இதுதவிர, தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி மற்றும் புளூ-சிப் வங்கிப் பங்குகளில் ஏற்பட்ட தொடர் விற்பனையும் பங்குச் சந்தையை சரிவிற்கு காரணமாக அமைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,446.72 புள்ளிகள் சரிந்து 76,759.26 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,342.27 புள்ளிகள் சரிந்து 76,863.71 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 394.75 புள்ளிகள் சரிந்து 23,866.85 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, டிரென்ட், பாரதி ஏர்டெல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் சன் பார்மா மற்றும் என்டிபிசி பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் என்டிபிசி, ஜியோ ஃபைனான்சியல், கோல் இந்தியா, சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 1.2% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.36% சரிந்தன.

மன்னூரில் 40,000 சதுர அடி அளவில் கிடங்கு வசதியை அமைப்பதில் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் முனைப்பு காட்டி வரும் நிலையில் அதன பங்குகள் 2.5% அதிகரித்தன. ரூ.401.33 கோடி மதிப்புள்ள பேக்கிங் ஆர்டரை பெற்றதையடுத்து எச்.ஜி. இன்ஃப்ரா இன்ஜினியரிங் பங்குகள் 6% உயர்ந்தன.

தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.4,672.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.6,333.26 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 1.43 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி 1.40 சதவீதமும் உயர்ந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் உயர்ந்த நிலையில், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சரிந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தை சரிவில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) சமமாக முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், 5.76 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 92.86 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

summary

After a strong rebound in the previous session, market came under pressure with Nifty 50 falling below 23,850 points.

முழு கட்டுரையைப் படிக்க →