சென்னை, மார்ச் 20: வழக்கறிஞராகத் தொழில் செய்வதற்கு நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அகில இந்திய பார் தேர்வு அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 ஆண்டு, 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாநில பார் கவுன்சில்களில் பதிவு செய்த உடன் வழக்கறிஞர் தொழில் செய்யும் நிலை இருந்தது.
இதில் இந்திய பார் கவுன்சில் (பி.சி.ஐ.) புதிய முறையைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, வழக்கறிஞர் தொழில் புரிய பார் கவுன்சில் பதிவுக்குப் பின்னர், பி.சி.ஐ. நடத்தும் அகில இந்திய பார் தேர்வில் (ஆல் இந்தியா பார் எக்ஸôம்) தேர்ச்சி பெற வேண்டும் என்று பி.சி.ஐ. 2010 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 30 நாள்களுக்குள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்கான சான்றிதழ் அளிக்கப்படும் என்று பி.சி.ஐ. கூறியுள்ளது.
இந்தத் தேர்வுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன் தாக்கமாக கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் முறையாக நடைபெற இருந்த தேர்வு மார்ச் 27-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு அவசியமா? வழக்கறிஞர் தொழிலுக்கு வருவோரின் அடிப்படைத் திறமையைப் பரிசோதிக்கவும், அந்தத் தொழிலில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்வதற்கும்தான் இந்தத் தேர்வு என்று பி.சி.ஐ. கூறுகிறது.
நீதித் துறை ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றப் புறக்கணிப்புகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது புதிய தேர்வு முறை அவசியம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால், மற்றொரு தரப்பினர் சட்டப் படிப்புகளை அளிப்பதில் அவலங்களை சீர்படுத்தினாலே போதும் என்று கூறுகின்றனர்.
கல்லூரிகளைத் தரப்படுத்துவது அவசியம்: நீதித் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
அரசுக் கல்லூரிகளில் கஷ்டமான சூழல்களில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள்தான் வழக்கறிஞர் தொழிலுக்கு அதிக அளவில் வருகின்றனர். முன்பு 2 ஆண்டு சட்டப் படிப்பு வழங்கப்பட்டபோது அதில் சிவில், குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் இல்லை. வக்கீல் தொழிலுக்கு வர விரும்புகிறவர்களுக்கு பார் கவுன்சில், சிவில், குற்றவியல் நடைமுறைகளைக் கொண்ட தேர்வை நடத்தியது. ஆனால், இப்போது நிலைமை வேறு.
சட்டம் தொடர்பான விஷயங்களை சீர்படுத்தினாலே வழக்கறிஞர் தொழிலைத் தரப்படுத்த முடியும். தனியார் சட்டக் கல்லூரிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நாட்டில் இப்போது சுமார் 500 தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன.
கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் அவை காளான்கள்போல் வளர்க்கப்பட்டுள்ளன. 10-க்கு 10 அடி அறைகளிலெல்லாம் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. அத்தகையக் கல்லூரிகளில் சேருவதற்கு பணம் ஒன்றே தகுதியாக உள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள், ரெüடிகள் போன்றோர் அங்கு சேருகின்றனர்.
அந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அதன் தேர்வுகளிலும் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. அத்தகையக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்த இந்திய பார் கவுன்சில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அரசு சட்டக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 3 ஆண்டு சட்டப் படிப்பில் 30 தாள்களும், 5 ஆண்டு படிப்பில் 44 தாள்களும் உள்ளன. இவற்றில் வழக்கறிஞர் தொழிலுக்குத் தேவையான அடிப்படைத் திறமைகளை வளர்ப்பது, திறமைகளை அறிவது என அனைத்து விஷயங்களும் உள்ளன.
மாணவர்களுக்கு வாரத்துக்கு 30 மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் விதி மற(று)க்கப்பட்டு வருகிறது. அரசு சட்டக் கல்லூரிகளில் முழு நேர ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை. அவர்களிலும் பெரும்பாலானவர்கள் மாற்றுப் பணிகளுக்குச் சென்றுவிடுகின்றனர்.
வழக்கறிஞர் உள்ளிட்ட தொழில்களில் இருப்பவர்கள் பகுதி நேர, கெüரவ விரிவுரையாளர்களாக அரசு கல்லூரிகளில் நியமிக்கப்படுகின்றனர். அவர்களால் வகுப்புகளைச் சரியாக எடுக்க முடியவில்லை. மாணவர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய விஷயங்களை முழுமையாக, சரியாக கொண்டுபோய்ச் சேர்க்க நடவடிக்கை மிக அவசியம் என்றார்.
குடும்பத்தைப் பாதிக்கும்: சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் கூறியது: மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இது போன்ற தேர்வு எதுவும் இல்லை.
சட்ட மாணவர்களுக்கு மட்டும் புதிய முறை ஏன்? அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டம் பயில்பவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கிய குறிப்பாக முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடினமாக உழைத்து தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. அவர்களை மேலும் ஒரு தேர்வை எழுத வைப்பது என்பது அவர்களின் குடும்பத்தைப் பாதிக்கும். அப்படியொரு புதிய தேர்வு அவசியம் என்று பி.சி.ஐ. கருதினால் அதை வழக்கமான பல்கலைக்கழகத் தேர்வுகளுடன் சேர்த்து நடத்தலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.