சென்னை

புற்றீசல் போல் சாலையோரக் கடைகள்

சென்னை, மே 20: சென்னையில் புற்றீசல்போல் பெருகி வரும் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் உணவுப்பொருள் தரக்குறைவாக இருப்பதுடன் சுகாதார கேடு விளைவிக்கும் வகையிலும் உள்ளன.  இதனால் அங்கு சாப்பிடுவோரின் ஆரோக்க

ஆ. கோபிகிருஷ்ணா

சென்னை, மே 20: சென்னையில் புற்றீசல்போல் பெருகி வரும் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் உணவுப்பொருள் தரக்குறைவாக இருப்பதுடன் சுகாதார கேடு விளைவிக்கும் வகையிலும் உள்ளன.

 இதனால் அங்கு சாப்பிடுவோரின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு புதுப் புது நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

 இது போன்ற சாலையோரக் கடைகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயத் துறை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 சென்னையில் பேக்கரி, ஹோட்டல்கள் உள்பட உணவுப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்துக்கும் அதிகம். இதை தவிர சாலையோரக் கடைகள் 10 ஆயிரத்தைத் தாண்டும்.

 பெருகி வரும் சாலையோரக் கடைகள்: சென்னையில் சாலையோர உணவுக் கடைகள் அதிகளவில் திறக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் தட்டுகள், ஸ்பூன்களை சுத்தமாகக் கழுவுவதில்லை, மிச்சமாகும் உணவுக் கழிவுகளை சாலையிலேயே எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு வாந்தி, பேதி, குடல் நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

 விலையைப் பொருத்த வரையில் மற்ற இடங்களைக் காட்டிலும் சாலையோர உணவுக் கடைகளில் குறைவு என்பதால் பெரும்பாலானவர்கள் உணவின் தரம் பற்றி சிந்திப்பதில்லை.

 மாலை நேரங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் காளான், பேல்பூரி கடைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 பழக்கடைகளில் பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் காளான்கள் 200 கிராம் ரூ.35-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால் பேல்பூரி கடைகளில் காளான் என்ற பெயரில் மாவு உருண்டைகளை ரூ.15-க்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.

 உரிமம் பெறுவது அவசியம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் கடைகள் முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு குறைவான வருமானம் ஈட்டும் கடைகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்கிறது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம்.

 இதற்கு முன்பு உணவுப் பொருள்களில் கலப்படம், தரநிர்ணயம், உணவுப் பாதுகாப்பு, உரிமம் பெறுதல் போன்றவற்றுக்கு தனித்தனியாக துறைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.

 ஆனால் கடந்த ஆண்டு (2011) ஆகஸ்ட் மாதம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயத் துறை தனியாக ஏற்படுத்தப்பட்டது. இந்தத் துறை, உணவுப் பொருள்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் கண்காணித்து வருகிறது.

 இந்தத் துறை ஏற்படுத்தப்பட்டு, சட்டங்கள் திருத்தப்பட்டு 10 மாதங்கள் ஆன நிலையில், சென்னையில் 895 கடைகள் மட்டுமே உரிமம் மற்றும் பதிவு பெற விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உணவுப் பாதுகாப்பு சட்டம் குறித்த சுற்றறிக்கை: இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் சென்னை தலைவர் பால்பர்ணபாஸ் கூறுகையில், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அஜினமோட்டோ, வினிகர் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

 உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2011-ன் படி உணவுப்பொருள்கள் குறித்த தகவல்கள் லேபிள்களில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதை பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதில்லை.

 இந்த சட்டத்தின் வரைமுறைகளை உணவுப் பொருள்கள் தயாரிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும் என்றார் அவர்.

 ஆயுள் தண்டனை: உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயத் துறையின் சென்னை வருவாய் வட்ட பொறுப்பு அதிகாரி கிருஷ்ணராஜ், "தரமற்ற மற்றும் கலப்பட உணவுப்பொருள்கள் விற்பனை செய்து நுகர்வோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் 2011-ன் படி அந்த பொருளின் தயாரிப்பாளருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது' என்றார்.

 "புற்றுநோய் வரலாம்'

 இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் வி.கனகசபை கூறியது:

 சாலையோரக் கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தகுதியான எண்ணெய் பல முறை உபயோகப் படுத்துவதால் அந்த உணவுப் பொருள்களில் கலோரி அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் வர அதிகளவில் வாய்ப்புள்ளது.

 சுகாதாரமற்ற உணவினால் வாந்தி, வயிற்றுப் போக்கு, மயக்கம் ஏற்படலாம். இதனைத் தடுக்க அதிக கலோரிகள் உள்ள சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இளநீர், பனை நுங்கு, மோர், பழச்சாறு போன்றவைகளை அதிகம் பருகலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT