கத்திப்பாராவில் 22 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம்
சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் தரையில் இருந்து 22 மீட்டர் உயரத்துக்கு சென்னை மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு மேல் செல்கிறது.
சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் தரையில் இருந்து 22 மீட்டர் உயரத்துக்கு சென்னை மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலுக்கான மேம்பாலம் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு மேல் செல்கிறது.
மெட்ரோ ரயில் பாதை சென்னையின் பல்வேறு பகுதிகளில் உயர்மட்ட வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கிண்டி கத்திப்பாராவில் மட்டுமே உயரமான இடத்தில் அமைக்கப்படுகிறது.
இதர வழித்தடங்களில் தரையில் இருந்து 18 மீட்டர் உயரத்திலேயே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்தப் பகுதியில் போக்குவரத்துக்கான மேம்பாலம் ஏற்கெனவே உள்ளதாலும், இட நெருக்கடி காரணமாகவும், சாதாரண உயரத்தை விட கூடுதல் உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைகிறது.
இதன் காரணமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு மெட்ரோ ரயிலில் செல்பவர்கள் சாகச பயணம் செல்வதுபோல இருக்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமையவுள்ள மெட்ரோ ரயில் மேம்பாலம் 75 மீட்டர் தொலைவுக்கு தூண்கள் இன்றி அமைக்கப்பட்டு வருகிறது. கத்திப்பாரா அருகே ஜி.எஸ்.டி., 100 அடி சாலைகள் இடையே தூண்கள் இன்றி 75 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
கோயம்பேடு - பரங்கிமலை இடையே சிமென்ட் தூண்கள் அமைக்கப்பட்டு இடவசதிக்கு ஏற்றவாறு 31 மீட்டர் நீளம் முதல் 12 மீட்டர் நீளம் வரை தொடர் மேம்பாலம் அமைக்கப்பட்டு அதன் மீது ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பாதையில் ஆலந்தூர் ரயில் நிலையம் அருகில் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி பாலம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், கத்திப்பாரா பாலம் - ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இடையே கேன்டி லீவர் தொழில்நுட்பத்தில் 75 மீட்டர் நீளத்துக்கு தூண்கள் இன்றி மேம்பாலம் கட்டப்படுகிறது.
இதில் இரண்டு தூண்களுக்கும் இடையே 3 மீட்டர் நீளமும், கீழ்ப் பகுதி தேவையான அளவு வளைவுடனும் தயாரிக்கப்பட்டுள்ள 12 ஜோடி, செக்மென்ட்களும், பாலத்தின் மையப் பகுதிகளை இணைக்கும் வகையில் 3 மீட்டர் நீளத்தில் செவ்வக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு செக்மென்ட் என 25 செக்மென்டுகள் இணைக்கப்பட்டு பாலம் கட்டப்படுகிறது.
இந்தப் பணி தொடங்கப்பட்டு இரண்டு தூண்களுக்கு இடையே தலா 3 மீட்டர் நீளத்தில், இரண்டு செக்மென்டுகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. முழுப்பணியும் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக முடிக்கப்படும் எனத் தெரிகிறது.
மெட்ரோ ரயிலின் முதல் சேவை இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.