முகப்பு
சென்னை

இடியும் நிலையில் பெசன்ட் நகர் கார்ல் ஷிமிட் நினைவுச் சின்னம்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்திருக்கும் கார்ல் ஷிமிட் (Karl Schmidt) நினைவுச் சின்னம் போதிய பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:31 PM
பகிர்:

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்திருக்கும் கார்ல் ஷிமிட் (Karl Schmidt) நினைவுச் சின்னம் போதிய பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளது.

எலியட்ஸ் கடற்கரை என அழைக்கப்படும் பெசன்ட் நகர் கடற்கரை மெரீனா கடற்கரையின் நீட்சியாகும். அடையாறு ஆறு கழிமுகம் முடிந்த பின்னர் ஆற்றுக்கு இக்கரையிலிருந்து பெசன்ட் நகர் கடற்கரை தொடங்குகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தக் கடற்கரை வெள்ளையர்கள் மட்டுமே வரக்கூடியதாக இடமாக இருந்தது. முந்தைய சென்னை ஆளுநர் எட்வர்ட் எலியட் என்பவர்தான் பொது மக்களுக்கும் இந்த கடற்கரைக்கு வந்துச் செல்ல அனுமதி அளித்தார். அதன் காரணமாகவே இன்றுவரை இது "எலியட்ஸ் பீச்' என்று அழைக்கப்படுகிறது.

Advertisement

கார்ல் ஷிமிட்: 1930-ஆம் ஆண்டில் இந்தப் பகுதி கடலில் மூழ்கிய ஒரு பெண்ணைக் காப்பாற்றி, தன்னுயிர் நீத்த டச்சு மாலுமியான கார்ல் ஷிமிட் (ஓஹழ்ப் நஸ்ரீட்ம்ண்க்ற்) என்பவரின் நினைவாக 1930 டிசம்பர் 30-இல் இங்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.

சென்னையின் அடையாள சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நினைவுச் சின்னம் பல திரைப்படங்களிலும் இடம்பிடித்துள்ளது.

கடல் மணல் பரப்பில் நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளதால் அஸ்திவாரம் வலுவாக அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பல ஆண்டு காலமாக இந்த நினைவுச் சின்னம் கம்பீரமாக காட்சியளித்தது.

ஆனால், இதன் இப்போதைய நிலை மோசமாக உள்ளது. இரவில் இந்த இடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது. இரவில் மது அருந்துவது உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இடியும் நிலையில்... நீண்ட நாள்களாக பராமரிப்பின்றி இருப்பதால் நினைவுச் சின்ன கட்டடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இதனால் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சுற்றுலா வருபவர்கள் நினைவுச் சின்னத்துக்கு அருகில் செல்வதற்குகூட அஞ்சுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இதன் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் நினைவுச் சின்னம் நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டே வருகிறது.

இதனை சீரமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கார்ல் ஷிமிட் நினைவுச் சின்னத்தை சீரமைப்பது தொடர்பான பணி நிலுவையில் உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்த பின்பு விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments