ராணுவ அதிகாரி மனைவி கொலை: ஒருவர் கைது
சென்னை நந்தம்பாக்கத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்த விவரம்:
சென்னை நந்தம்பாக்கம் ராணுவ குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (வயது 75). இவரது கணவர் பாலசுப்பிரமணியம் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெங்களூரில் வசித்து வருகிறார். ராதாவுக்கு துணையாக இளைய மகள் வீணா தங்கி இருந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், வீணா கோடை விடுமுறைக்காக ஐதராபாத் சென்று விட்டார். இதனால் ராதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை ராதா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த நந்தம்பாக்கம் போலீஸார் ராதாவின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் ராதா அணிந்திருந்த 10 பவுன் நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீஸார் சுந்தர் (36) என்பவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். சுந்தர் நந்தம்பாக்கம் பகுதியில் எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வருபவர். இவர் ராதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று மின்பொருள்கள் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் சனிக்கிழமை மாலை ராதா அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து நந்தம்பாக்கம் போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.