முகப்பு
சென்னை

ரயில்களில் சிறப்புப் பெட்டிகள் இல்லை புறக்கணிக்கப்படும் மாற்றுத் திறனாளிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் பல எக்ஸ்பிரஸ் ரயில்களில் இணைக்கப்படுவதில்லை. அப்படியே இணைக்கப்பட்டாலும் அந்தப் பெட்டியில் சாதாரண மக்களும் ஏறிக்கொள்வதால் மாற்றுத் திறனாளிகளுக்கு பயணத்தின்போது சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:43 PM
பகிர்:

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் பல எக்ஸ்பிரஸ் ரயில்களில் இணைக்கப்படுவதில்லை. அப்படியே இணைக்கப்பட்டாலும் அந்தப் பெட்டியில் சாதாரண மக்களும் ஏறிக்கொள்வதால் மாற்றுத் திறனாளிகளுக்கு பயணத்தின்போது சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அண்மைக் காலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி பல ரயில்களில் இணைக்கப்படுவதில்லை. அப்படி இணைக்கப்பட்டாலும் அப்பெட்டிகளில் பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள், காவல்துறையினர் பயணம் செய்கின்றனர். இதனால் ரயிலில் உள்ள சிறப்பு பெட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடம் கிடைப்பதில்லை.

மேலும் ரயில்களில் இணைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் எந்த இடத்தில இணைக்கப்படுகிறது என்ற தகவலையும் ரயில்வே நிர்வாகம் முறையாக அறிவிப்பதில்லை.

Advertisement

சிரமங்கள்: மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைக் கட்டண டிக்கெட் கொடுப்பதில் ரயில் ஊழியர்கள் ஏதாவது காரணம் கூறி நிராகரிப்பதாகவும் அலைக்கழிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களை இலவசமாக பார்சல் செய்ய விதி இருந்தும், ஊழியர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் வாகனங்களை ரயில்களில் ஏற்ற அனுமதி தருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

போராட்டப் பயணம்: எக்ஸ்பிரஸ், புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் ரயில்கள் என அனைத்து ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு பெட்டி உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. இதனால் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் தங்களது உதவியாளர் ஒருவரின் துணையுடன் பயணம் செய்து வந்தனர்.

இந்நிலையில், இப் பெட்டியை 2009-ஆம் ஆண்டு முதல் முன்பதிவுப் பெட்டியாக அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இதனால் இந்தப் பெட்டியில் பயணம் செய்யும் கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்தது. மேலும் 2 மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் இருவர் என 4 பேர் மட்டுமே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. பின்பு ரயில்வே வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த நிலை நீக்கப்பட்டது. இவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு பல நேரங்களில் ரயில் பயணம் என்பது கசப்பான அனுபவமாகவே இருந்து வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் கூறியதாவது:

ரயில் பயணம் மாற்றுத் திறனாளிகளுக்கு எப்போதும் கசப்பான அனுபவத்தையே தருகிறது. அனைத்து ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு பெட்டி இணைக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அண்மையில் சில ரயில்களில் மட்டுமே இவ்வகை பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதனால் மாற்றுத் திறனாளிகள் ரயில் பயணத்தின்போது குழப்பமடைகின்றனர்.

இப்படி மாற்றுத் திறனாளிகள் ரயில் பயணத்தில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு நடத்த வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை விரைவில் ரயில்வே நிர்வாகம் தீர்த்து வைக்க உதவ வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments