முகப்பு
சென்னை

மெட்ரோ ரயில்: கோயம்பேடு - பரங்கிமலை இடையே 15 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளப் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக கோயம்பேடு பணிமனை - பரங்கிமலை இடையிலான உயர்மட்ட வழித் தடத்தில் 15 கிலோ மீட்டருக்கு தண்டவாளப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக கோயம்பேடு பணிமனை - பரங்கிமலை இடையிலான உயர்மட்ட வழித் தடத்தில் 15 கிலோ மீட்டருக்கு தண்டவாளப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும் இந்த 15 கிலோ மீட்டருக்கு பக்கவாட்டு கான்கரீட் சுவர்கள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலும் மொத்தம் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

Advertisement

இதில், 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையிலும், 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு உயர்மட்டப் பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும், கோயம்பேடு பணிமனையில் இருந்து ரயில் வழித்தடத்துக்குச் செல்ல வேண்டிய தண்டவாளப் பணிகளும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிவடைந்துள்ளது.

மேலும் சுமார் 11 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் தண்டவாளங்களுக்கு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

மேலும் தண்டவாளங்களில் ரயில் மாறி செல்ல மொத்தம் 17 டர்ன் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 11 டர்ன் அவுட் கோயம்பேடு பணிமனையிலும், 6 டர்ன் அவுட் கோயம்பேடு - ஈக்காட்டுதாங்கல் வழியில் அமைக்கப்பட்டுள்ளன.

ஜூனில் மெட்ரோ ரயில்: 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் மெட்ரோ ரயில் தனது பயணத்தை கோயம்பேடு - பரங்கிமலை இடையே தொடங்கும்.

இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே 8 பறக்கும் ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், கோயம்பேடு, சி.எம்.பி.டி., (கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்) அரும்பாக்கம் ஆகிய 3 பறக்கும் ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணி முழுமையாக முடிந்து, உள்வேலைப்பாடுகள் வேகமாக நடக்கின்றன.

மூன்று தளங்களாக அமைக்கப்படும் கோயம்பேடு பறக்கும் ரயில் நிலையத்தில் 6 எஸ்க்லேட்டர்கள் (நகரும் படிக்கட்டுகள்) நிறுவப்பட்டுவிட்டன. லிப்ட்டுகள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் போக்குவரத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிமனை, கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

பங்குகள்: சென்னையில் இரு வழித்தடங்களிலும் ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிக்காக மத்திய அரசு 15 சதவீதம் பங்கு மூலதனமாகவும், 5 சதவீதம் சார்நிலை கடனாகவும் வழங்குகிறது.

அதேபோல தமிழக அரசு 15 சதவீதம் பங்கு மூலதனமாகவும், 5.78 சதவீதம் சார் நிலை கடனாகவும் வழங்குகிறது. மீதியுள்ள 59.22 சதவீதம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு ஏஜென்சியிடம் கடனாக பெறப்படுகிறது.

திட்டப் பணிகளுக்காக இதுவரை மத்திய அரசு ரூ.857.79 கோடியும் தமிழக அரசு ரூ.2029 கோடியும் வழங்கியுள்ளன. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு ஏஜென்சி ரூ.1860 கோடி வழங்கியுள்ளது.

இப்போது மெட்ரோ ரயில் பணிகளில் உயர்மட்ட வழித்தடங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் கட்டுமான பணி ரூ.4750 கோடி செலவில் சுமார் 80 சதவீதம் முடிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments