சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பில் அலட்சியம்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுவது குறைந்துவிட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுவது குறைந்துவிட்டது. இதனால் ரயில் நிலையத்தின் பாதுகாப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த மே 1-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் பொறியாளர் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சென்ட்ரலின் அனைத்து நுழைவு வாயில்களிலும் ஏராளமான ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் நிறுத்தப்பட்டனர்.
Advertisement
பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டன. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்பே பயணிகள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு ஒருவர் பின் ஒருவராக ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இவையெல்லாம் குண்டு வெடிப்பு நடந்த ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே நீடித்தது.
பின்பு இந்தப் பாதுகாப்பு கெடுபிடிகள் எல்லாம் படிப்படிப்படியாக குறைந்து, இப்போது முழுவதுமாக பாதுகாப்பு, சோதனை ஆகியவற்றுக்கு இடமில்லாமால் சென்ட்ரல் ரயில் நிலையம் காட்சியளிக்கின்றது. குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒரு மாதம் நிறைவடையும் முன்பே, முன்பு இருந்ததைப் போன்று பாதுகாப்பில் தொய்வு காணப்படுகிறது.
வெறிச்சோடிய நுழைவு வாயில்: சென்னை சென்ட்ரலில் உள்ள முக்கிய நுழைவு வாயில்களில் இப்போது பயணிகளை சோதனை செய்வதில்லை. அவர்களின் உடமைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை.
சில நுழைவு வாயில்களில் மட்டுமே ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீஸாரும் அமர்ந்துள்ளனர். அவர்களும் அனைவரையும் சோதனை செய்வதில்லை. அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும் நபர்களை மட்டுமே சோதனை செய்கின்றனர்.
இன்னும் சில நுழைவு வாயில்களில் காவலர்களே இல்லாத சூழல் நிலவுகிறது. அங்கு பயணிகள் மட்டுமல்ல, எவர் வேண்டுமானாலும் ரயில் நிலையத்தின் உள்ளே சென்று வரலாம் என்ற நிலை உள்ளது. மெட்டல் டிடெக்டர்கள், லக்கேஜ் ஸ்கேனர்கள் அனைத்தும் உள்ளது உள்ளபடியே உள்ளன.
காவலர்கள் பற்றாக்குறை: ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள 40 சதவீத பணியிடங்கள் கடந்த ஓராண்டாக நிரப்பப்படாததால் ரயில் நிலையங்கள் மற்றும் பயணிகளை பாதுகாப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் மட்டும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சுமார் 3 ஆயிரம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினம், சுதந்திர தினம், குடியரசு தினங்களில் மட்டுமே பயணிகள் முழுவதுமாக சோதனை செய்யப்படுகின்றனர். மேலும் இந்தப் பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் ரயில்வே பாதுகாப்பு படையில் ஆள்கள் இல்லை.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரி கூறியது: சென்னை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு படையின் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பணியில் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். விரைவில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார் அவர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு
எழும்பூர் ரயில் நிலையத்தில் எந்தவித முன் அறிவிப்புமின்றி ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சீமா அகர்வால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஒரு மாதம் முடிவடையவுள்ள நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ரயில் நிலையத்தில் உள்ள லக்கேஜ் ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவை முறையாக வேலை செய்கின்றனவா என்றும் சோதித்து பார்க்கப்பட்டது.
பாதுகாப்புப் பணியில் உள்ள ரயில்வே போலீஸாரிடமும் விசாரணை செய்யப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக சீமா அகர்வால் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது டி.ஐ.ஜி. பாஸ்கரன், எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரும் உடனிருந்தனர்.