முகப்பு
சென்னை

நதிநீர் மேம்பாடு: கழிவுநீர் கலக்கும் 179 இடங்களில் சீரமைப்பு பணி தொடக்கம்

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட முக்கிய நீர்வழித் தடங்களில் கழிவு நீர் கலக்கும் இடங்களைக் கண்காணித்து சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Updated On : 6 மார்ச், 2014 at 3:39 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:04 AM

கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் உள்ளிட்ட முக்கிய நீர்வழித் தடங்களில் கழிவு நீர் கலக்கும் இடங்களைக் கண்காணித்து சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ரூ.300 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இப்பணிகள், முதல் கட்டமாக 179 இடங்களில் நடைபெற்று வருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணிகளை 24 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள நீர்வழித்தடங்களில் மொத்தம் 337 இடங்களில் கழிவு நீர் கலப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையில் இருந்து வரும் கழிவு நீர் மழைநீர் வடிகால்களில் கலந்து நீர்வழித்தடங்களுக்குச் செல்வதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து, அதைச் சீரமைப்பதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertisement

இது தவிர நடப்பு நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் கூவம் நதியை முழுமையாக சீரமைக்க ரூ. 3,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நீர்வழித் தடங்களில் கழிவுநீர் கலக்கும் இடங்களைச் சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி முதல் கட்டமாக கூவம் நதி வழித்தடத்தில் 49 இடங்களிலும், பக்கிங்ஹாம் கால்வாய் வழித்தடத்தில் 113 இடங்களிலும், அடையாறு நீர் வழித்தடத்தில் 17 இடங்களிலும் கழிவுநீர் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து குடிநீர் வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியது:-

கழிவுநீர் கலக்கும் இடங்களைச் சீரமைக்கும் பொருட்டு 77 ஆயிரத்து 578 மீட்டர் நீளத்துக்கு குழாய்களை பெரிதாக்குதல், சாலையோர கழிவு நீரேற்று நிலையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முகப்பேர், சாலிகிராமம், விருகம்பாக்கம், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு உள்பட 20 இடங்களில் கழிவு நீரகற்றுப் பணிகள் மேம்படுத்தப்படும்.

நீர்வழித் தடங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.